புத்ராஜெயா, ஜூலை 24 - ரஹ்மா அடிப்படை பங்களிப்பு (சாரா) திட்டத்தின் மூலம் 18 வயதுக்கும் மேற்பட்ட மலேசிய குடிமக்களுக்கு வழங்கப்படும் 100 வெள்ளி ரொக்க உதவியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அனைத்து தரப்பினருக்கும் நினைவூட்டியுள்ளார்.
அதிக வருமானம் பெறுவோருக்கு இந்தத் தொகை சிறியதாகக் கருதப்பட்டாலும் கிராமப்புறங்கள் மற்றும் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு இந்த உதவி மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கும் என்று நிதியமைச்சருமான அவர் கூறினார்.
அனைத்து விமர்சனங்களும் 100 வெள்ளியைச் சார்ந்தவையாக மட்டுமே உள்ளன.ஆனால் உங்களுக்கு மாதம் 40,000, 20,000 வெள்ளி சம்பளம் வழங்கப்படுகிறது. அதனுடன் ஒப்பிடுகையில் 100 வெள்ளி ஒன்றுமில்லை என்பது உண்மைதான்.
ஆனால் நாம் கிராமங்களுக்குச் சென்றால் (அங்கு நன்மைகள் உள்ளன) என்பது எனக்குத் தெரியும் என்று அவர் இன்று நடைபெற்ற நிதி அமைச்சின் மாதாந்திர கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.
இரண்டு வயது வந்த பிள்ளைகள் மற்றும் ஒரு திருமணமான தம்பதியினரைக் கொண்ட ஏழைக் குடும்பத்திற்கான பண உதவி 400 வெள்ளியை எட்டக்கூடும். தற்போதுள்ள ரஹ்மா ரொக்கப் பங்களிப்பையும் சேர்த்தால் அத்தொகை 700 வெள்ளியாக அதிகரிக்கக்கூடும் என்றும் பிரதமர் விளக்கினார்.
எனவே, இந்த முன்னெடுப்பை குறைத்து மதிப்பிடாதீர்கள். ஏனென்றால் தற்போதுள்ள ஒதுக்கீட்டை 1,300 கோடி வெள்ளியிலிருந்து 1,500 கோடி வெள்ளியாக (வெ.200 கோடி அதிகரிப்பு) உயர்த்துவதற்கான எங்கள் (அரசாங்கத்தின்) முயற்சியாகும் என்று அன்வார் கூறினார்


