கோலாலம்பூர், ஜூலை 24 - கெந்திங்- கோல குபு பாரு சாலையில் உள்ள
செகுண்டேர் காட்டுப் வனப்பகுதியின் 24 ஹெக்டர் பரப்பளவில் காட்டுத் தீ
ஏற்பட்டுள்ள நிலையில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் எண்பது
விழுக்காட்டுப் பகுதியில் தீயை வெற்றிகரமாக அணைத்துள்ளனர்.
இந்த தீவிபத்து தொடர்பில் நேற்று முன்தினம் மாலை 6.25 மணிக்கு
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு
வீரர்கள் இன்று வரை இடைவிடாமல் தீயை அணைக்கும் பணியை
மேற்கொண்டு வருவதாக சிலாங்கூர் 6வது மண்டல தலைவர், உயர்
ஆணையர் 11 முஸ்தாகிம் ரிமோன் கூறினார்.
முப்பது நிமிடங்களில் சம்பவ இடத்தை அடைந்த தீயணைப்பு வீரர்கள்
செகுண்டேர் வனப்பகுதியில் தீ ஏற்பட்டுள்ளதையும் அது பாதுகாக்கப்பட்ட
வனப்பகுதி அல்ல என்பதையும் கண்டறிந்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.
எனினும், தீ ஏற்பட்ட பகுதிக்குச் செல்வதற்கான வழி இல்லாத
காரணத்தால் தீயணைப்பு வீரர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கினர்.
தீயணைப்பு உபகரணங்களுடன் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு
அவர்கள் நடக்க வேண்டியிருந்தது என அவர் சொன்னார்.
காட்டின் உட்புறத்தில் இருந்த பாதிக்கப்பட்ட பகுதியில் நீர் கிடைக்காத
காரணத்தால் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் ஹெலிகாப்டர் சேவை
பயன்படுத்தப்பட்டது. தீயை அணைக்க சுமார் 6,000 லிட்டர் நீர்
பயன்படுத்தப்பட்டது என்றார் அவர்.
தீயணைப்பு பணிகளை துல்லியமாக மேற்கொள்வதற்காக ட்ரோன்கள்
மற்றும் வெப்பத்தை அடையாளம் காணும் கேமராக்களை தீயணைப்புத்
துறை பயன்படுத்தியது என்றார் அவர்.
மலைப்பாங்கான பகுதி, வெப்ப வானிலை ஆகியவற்றோடு பலத்த காற்று
ஆகியவை தீ விரைவாகப் பரவுவதற்கு காரணமாக இருந்தன. இதுவே தீயை அணைப்பதில் எங்களுக்கு பெரும் சவாலாகவும் விளங்கியது என அவர் குறிப்பிட்டார்.
எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பகுதிகளில் திறந்த வெளி தீயிடல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


