கோலாலம்பூர், ஜூலை 24 - இம்மாதம் 16ஆம் தேதி நோம் பென்
அனைத்துலக விமான நிலையம் வழியாக இங்கிலாந்துக்கு 63 கிலோ
கஞ்சாவை கடத்த முயன்ற சந்தேகத்தின் பேரில் கம்போடிய
அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நான்கு மலேசியர்களை அரச மலேசிய
போலீஸ் படை அடையாளம் கண்டுள்ளது.
அந்த சந்தேகப் பேர்வழிகள் அனைவரும் 27 முதல் 70
வயதுக்குட்பட்டவர்கள் என்று புக்கிட் அமான் போதைப் பொருள் குற்ற
விசாரணைத் துறையின் இயக்குநர் டத்தோ ஹூசேன் ஓமார் கான்
கூறினார்.
இந்த கைது நடவடிக்கை தொடர்பில் வெளியுறவு அமைச்சு (விஸ்மா
புத்ரா) மூலம் தங்களுக்கு தகவல் கிடைத்ததாகக் கூறிய அவர், எனினும்,
கம்போடிய அதிகாரிகள் தரப்பிலிருந்து இச்சம்பவம் இன்னும் உறுதி
செய்யப்படவில்லை என்றார்.
இதன் தொடர்பான மேல் விபரங்கள் மற்றும் அதிகாரிகளின் விசாரணை
குறித்த தகவல்களை பெறுவதற்காக தாங்கள் கம்போடியாவில் உள்ள
மலேசிய அரச தந்திர பிரதிநிதித்துவ அலுவலகத்துடன் ஒத்துழைத்து
வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கடத்தல் நடவடிக்கையில் தொடர்புடைய கும்பல்களை அடையாளம்
காண்பதற்காக தாங்கள் விசாரணையைத் தொடக்கியுள்ளதாக அவர்
பெர்னாமா தொடர்பு கொண்ட போது கூறினார்.
இந்த கடத்தல் சம்பவத்திற்கும் மலேசியாவைத் தளமாகக் கொண்டு
செயல்படும் அனைத்துலக போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கும்
தொடர்புள்ளதா என்பது தொடக்க கட்ட விசாரணையில் உறுதி
செய்யப்படவில்லை என்றார் அவர்.
இணைய வழி வேலை வாய்ப்புகள் குறிப்பாக உள்ளடக்கம் என்னவென்று
தெரியாமல் வெளிநாடுகளுக்கு பொருள்களைக் கொண்டுச் செல்லும்
பணிகள் தொடர்பில் வழங்கப்படும் சலுகைகளில் மயங்கி விட
வேண்டாம் என்றும் அவர் பொது மக்களைக் கேட்டுக்கொண்டார்.


