கோலாலம்பூர், ஜூலை 24 - இதுவரை 85 லட்சத்திற்கும் அதிகமான ரஹ்மா ரொக்க உதவி (எஸ் டி.ஆர்.) பெறுநர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த முன்னெடுப்பின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டத்தின் மூலம் 400 கோடி வெள்ளி ரொக்க உதவி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு ஆகஸ்டு மற்றும் நவம்பர் மாதங்களில் மேலும் இரண்டு கட்ட எஸ்.டி.ஆர். ரொக்க விநியோகங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்தது.
எஸ்.டி.ஆர். மற்றும் ரஹ்மா அடிப்படை உதவித் திட்டத்திற்கான (சாரா) நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் 1,000 கோடி வெள்ளியிலிருந்து 1,300 கோடி வெள்ளியாக அதிகரித்துள்ளது.
இந்த நிதி அதிகரிப்பின் வாயிலாக 90 லட்சம் பெறுநர்கள் பயன் பெறுவதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. இது மலேசியாவின் வயது வந்தோர் மக்கள்தொகையில் 60 சதவீதத்திற்கு சமம் என்று நிதியமைச்சு நாடாளுமன்றத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வப் பதிலில் தெரிவித்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் சாரா திட்டத்திற்காக வழங்கப்பட்ட மொத்த நிதி ஒதுக்கீடு குறித்து கோத்தா மலாக்கா தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் கூ போய் தியோங் எழுப்பிய கேள்விக்கு அமைச்சு இவ்வாறு பதிலளித்தது.
சாரா திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 14ஆம் தேதி வரை 49 லட்சத்திற்கும் அதிகமான பெறுநர்கள் தங்கள் மைகார்டைப் பயன்படுத்தி கடைகளில் அடிப்படைப் பொருட்களை வாங்கியுள்ளதாக அமைச்சு தெரிவித்தது.
மொத்தம் 54 லட்சம் பெறுநர்கள் சாரா திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான விநியோகத் தொகை ஆண்டுக்கு 500 கோடி வெள்ளியாகும். சாரா பெறுநர்களின் எண்ணிக்கையும் ஏப்ரல் 2025 முதல் 700,000 பேரிலிருந்து 54 லட்சமாக அதிகரித்துள்ளது என்று அது கூறியது.
வாழ்க்கைச் செலவினச் சவால்களை எதிர்கொள்பவர்களுக்கும் தேவைப்படுபவர்களுக்கும் பண உதவித் திட்டங்கள் திறம்பட வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு அரசாங்கம் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டது.


