NATIONAL

செஜாத்ரா மடாணி முன்னெடுப்பு நாளை தொடங்கப்படும் - பிரதமர் அறிவிப்பு

23 ஜூலை 2025, 5:11 AM
செஜாத்ரா மடாணி முன்னெடுப்பு நாளை தொடங்கப்படும் - பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர், ஜூலை 23 - நாட்டில் பரம ஏழ்மையை  துடைத்தொழிப்பதற்கான தொடர்ச்சியான முயற்சியின்  ஒரு பகுதியாக அரசாங்கம் நாளை செஜாதேரா மடாணி முன்னெடுப்பைத் தொடங்கவுள்ளதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

அரசாங்கம் மற்றும் பெருநிறுவனத் துறையின் கூட்டு முயற்சியின் மூலம் பரம ஏழைகள் மற்றும் ஏழைகளுக்கு தொடர்ந்து உதவி கிடைப்பதை உறுதி செய்யும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டின் பிரதிபலிப்பாக இந்த தொடக்க நிகழ்வு  அமைந்துள்ளது என்று அவர் கூறினார்.

மிகவும்  வறிய நிலையை ஒழிப்பதற்கான முயற்சிகள் தொடக்கம்  முதலே எனது முன்னுரிமையாக இருந்து வருகின்றன. கடந்த  2023 ஆம் ஆண்டில் அடையாளம் காணப்பட்ட  கிட்டத்தட்ட 150,000 பரம ஏழைக் குடும்பங்கள் 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அப்பிரிவிலிருந்து விடுபட்டு விட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

செஜாத்ரா மடாணி முன்னெடுப்பை நாளை  நான் தொடக்கவிருக்கிறேன்.  அரசாங்கம் மற்றும் பெரு நிறுவனத் துறையின்  வாயிலாக மேற்கொள்ளப்படும் இந்த கூட்டு  முயற்சி, பரம ஏழைகள் மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள தரப்பினருக்கு முறையாக உதவி வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சியாகும் என்று அவர் கூறினார்.

இன்று அனைத்து முக்கிய தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக தளங்கள் வாயிலாக நேரடியாக ஒளிபரப்பப்பட்ட மலேசியர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் அறிவிப்பின் போது  பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடக்கத்திலிருந்து மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க பல்வேறு வகையான உதவிகளை அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வந்துள்ளதாக  நிதியமைச்சராகவும் இருக்கும் அன்வார் குறிப்பிட்டார்.

எடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளில் ரஹ்மா ரொக்க பங்களிப்பு (எஸ்.டி.ஆர்.) மற்றும் ரஹ்மா அடிப்படை பங்களிப்பு (சாரா) ஆகியவையும் அடங்கும். இதற்கு அதிகபட்சமாக ஒதுக்கப்பட்ட தொகை 1,300 கோடி வெள்ளியாகும்.  இது வரலாற்றில் மிக உயர்ந்த  உதவித்தொகையாக உள்ளது என்று அவர் கூறினார்.

சமூக நலத்துறையின் கீழ் ரொக்க உதவி ஒதுக்கீடு 290  கோடி வெள்ளியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர்,  மூத்த குடிமக்கள் மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளுக்கான மாதாந்திர நலத்திட்ட உதவி விகிதத்தை அதிகரிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.