ஜோகூர் பாரு, ஜூலை 23 - அதிகரித்து வரும் சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஒரு விரிவான தேசிய பெருந்திட்டத்தை உருவாக்குமாறு மலேசிய மருத்துவ சங்கம் (எம்.எம்.ஏ.) அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இந்தப் பிரச்சினை இனி ஒரு குறுகிய கால சவாலாக இருக்காது என்றும், மாறாக பொது சுகாதார அமைப்பின் நிலைத்தன்மைக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் அது எச்சரித்தது.
சுகாதாரப் பணியாளர்களை வலுப்படுத்தவும் அமைப்பின் நிலைத்தன்மையை உறுதி செய்யவும் நீண்டகால, தரவு சார்ந்த சீர்திருத்தங்களின் அமலாக்கம் அவசியம் என்று எம்.எம்.ஏ. தலைவர் டத்தோ டாக்டர் கல்விண்டர் சிங் கைரா வலியுறுத்தினார்.
மலேசியாவிற்கு தற்போது அவசரமாகத் தேவைப்படுவது சுகாதாரப் பராமரிப்பு மனித வளங்களுக்கான விவேக எதிர்காலத் திட்டமிடல் ஆகும். இது விரிவான தரவு ஆய்வு, நாடு தழுவிய சுகாதார நிபுணர்களின் பணியமர்த்தலை வரைபடமாக்குதல் மற்றும் மாநிலம் அல்லது வட்டாரத்தின் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில் இடைவெளிகளைக் கண்டறிதல் ஆகியவற்றுடன் இதனைத் தொடங்க வேண்டும் என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
சரியான திட்டமிடலின் வாயிலாக அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்குத் தேவையான மருத்துவர்கள், நிபுணர்கள், தாதியர்கள் மற்றும் துணை சுகாதார நிபுணர்களின் எண்ணிக்கையை அரசாங்கத்தால் திட்டமிட முடியும் என்று டாக்டர் கல்விண்டர் குறிப்பிட்டார்.
அதே சமயம், தற்போதுள்ள சுகாதாரப் பணியாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு வலுவான தேசிய உத்தியை உருவாக்குவதும் முக்கியமானதாகும். இதில் சம்பளம், அலவன்ஸ், தொழில் மேம்பாட்டு வாய்ப்புகள் மற்றும் தொழில்முறை வளர்ச்சிக்கான தெளிவான தடங்களில் கட்டமைக்கப்பட்ட மேம்பாடுகளும் அடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.
வயதான மக்கள் தொகையை நோக்கி செல்லுமு மலேசியாவின் சூழல், குறிப்பாக முதியோர் மருத்துவம், நாள்பட்ட நோய் மேலாண்மை, மறுவாழ்வு மற்றும் நீண்டகால பராமரிப்பு ஆகியவற்றில் சுகாதார சேவைகளுக்கான தேவையை கணிசமாக அதிகரிக்கும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.


