கோலாலம்பூர், ஜூலை 23 - நாட்டின் மரண தண்டனைக் கொள்கை மற்றும் இலக்கை விரிவாக ஆய்வு செய்ய குற்றவியல் சட்ட சீர்திருத்தக் குழுவின் கீழ் அரசாங்கம் ஒரு பணிக்குழுவை அமைக்கும்.
அந்த பணிக்குழுவை உருவாக்குவது குறித்து கடந்த ஜூலை மாதம் 9ஆம் தேதி அரசாங்கம் முடிவெடுத்ததாகப் பிரதமர் துறை (சட்டம் மற்றும் அமைப்பு சீர்திருத்தம்) அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட் கூறினார்.
மரண தண்டனை கைதிகளின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உட்பட அனைத்து பங்களிப்பாளர்களையும் உள்ளடக்கிய சான்றுகள் சார்ந்த அணுகுமுறையைப் பயன்படுத்தி இந்த ஆய்வு விரிவாக மேற்கொள்ளப்படும்.
எந்தவொரு இறுதி முடிவையும் எடுப்பதற்கு முன்பு இந்த விஷயத்தை முழுமையாக ஆராய்வதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று நாடாளுமன்ற இணையதளத்தில் நேற்று பதிவேற்றிய எழுத்துப்பூர்வப் பதிலில் அமைச்சர் கூறினார்.
மரண தண்டனையை முழுமையாக ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வழிகாட்டுதல் குறித்து புக்கிட் பெண்டேரா தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர்
சியர்லீனா அப்துல் ரஷீட் எழுப்பியக் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பல கலந்துரையாடல் நிகழ்வுகளின்போது பங்களிப்பாளர்கள் அளித்த பரிந்துரைகளைப் பின்பற்றி பணிக்குழு நிறுவப்பட்டதாக அசாலினா கூறினார்.
மரண தண்டனைக்காகக் காத்திருக்கும் கைதிகள் இன்னும் இருப்பதைக் கருத்தில் கொண்டு இது குறித்து இன்னும் விரிவான ஆய்வு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
மரண தண்டனையை முழுமையாக ஒழிப்பதற்கான நடைமுறை, சட்ட மற்றும் மனித உரிமை அம்சங்கள் உள்ளிட்ட கொள்கை இலக்கு குறித்த ஆரம்பக் கருத்துக்களைச் சேகரிப்பதற்காக நடத்தப்பட்ட இந்த கலந்துரையாடல் நிகழ்வில் அரசு நிறுவனங்கள், சட்ட அமைப்புகள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் பங்கேற்றதாக அசாலினா தெரிவித்தார்.


