ஈப்போ, ஜூலை 22- வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 328.9வது கிலோமீட்டரில் தாப்பாவிலிருந்து பீடோர் செல்லும் பகுதிக்கு அருகில் இன்று நிகழ்ந்த
இரு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் மூன்று முதியோர் பலியான வேளையில் மேலும் மூவர் காயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பில் காலை 11.19 மணிக்கு தனது துறைக்கு அவசர அழைப்பு வந்ததாக பேராக் மாநிலத் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டுப் பிரிவு உதவி இயக்குநர் சபரோசி நோர் அகமது கூறினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த ஏழு உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் சோங் ஓங் (வயது 77), தே கிம் காய் வயது 76) மற்றும் டான் ஆ தக் (வயது 70) ஆகியோர்
இவ்விபத்தில் பலியானதைக் கண்டதாக அவர் சொன்னார்
டோயோட்டா வியோஸ் மற்றும் புரோட்டான் எக்ஸ்50 ஆகிய வாகனங்களுக்கு இடையே இந்த விபத்து நிகழ்ந்தது தொடக்கக்கட்ட ஆய்வில தெரிய வந்தது என அவர் தெரிவித்தார்.
டோயோட்டா வியோஸ் காரில் பயணித்த ஆடவர் பாதிக்கப்பட்டவர் காயமடைந்தார். அதே நேரத்தில் புரோட்டான் எக்ஸ்50 வாகனத்தில் ஐவர் பயணித்த வேளையில் அவர்களில் இருவர் காயமடைந்தனர். மேலும், மூன்று பேர் உயிரிழந்தனர் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
இறந்தவர்களின் உடல்கள் மேல் நடவடிக்கைக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக சபரோசி குறிப்பிட்டார்.
இதற்கிடையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இறந்தவர்களின் உடல்களும் காயமடைந்தவர்களும் தாப்பா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தாப்பா மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஜோஹாரி யாஹ்யா தெரிவித்தார்.


