(ஷாலினி இராஜமோகன்)
ஷா ஆலம், ஜூலை 22 - சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமுதாயத்தில் நிழவும் வறுமையை ஒழிக்க மாநில அரசின் அணுகுமுறை குறித்து விளக்கிய சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் , சமூக பொருளாதார மேம்பாடு, சமூக நலன், தொழிலாளர் ஆற்றல் ஆட்சிக் குழு உறுப்பினராகவும் உள்ள வீ.பாப்பாராய்டு குறுகிய மற்றும் நீண்ட கால திட்டங்களை மாநிலம் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். ஆனால் இவை வெற்றியடைய, சமூகம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் அதிகபட்ச ஒத்துழைப்பு மிக அவசியம் என்றார்.
நீண்ட கால யுக்திகளாகப், பள்ளி கல்வி மேம்பாடுகளை குறிப்பிடலாம், குறிப்பாக தமிழ் பள்ளிகளுக்கு வழங்கும் 50 லட்சம் ஆண்டு மானியம். இது சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 99 தமிழ்ப்பள்ளிகளுக்கும் வழங்கப்படுகிறது. பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாடு, கற்பித்தல் எல்லாம் மத்திய அரசின் பொறுப்பு என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இருப்பினும், ஒவ்வொரு ஆண்டும் 50 லட்சத்தை மாநில அரசின் மானியமாக வழங்குவது மாணவர்கள் முன்னேற்றத்தில் கல்வியில் கூடிய பட்ச சாதனையை இந்திய மாணவர்களிடமிருந்து பெற சமுதாயத்திடம் இருந்தும் பெற்றோர்களிடம் இருந்தும் அதற்கான ஒத்துழைப்பை அரசு எதிர்பார்க்கிறது என்றார்.
அதே போன்று பேருந்து கட்டண உதவி, இலவச டியூசன் (PTRS) கற்றல் உதவித்திட்டங்களை கொண்டிருக்கும் வேளையில் , குறுகிய கால ஏழ்மை ஒழிப்பு மற்றும் சமூக மேம்பாட்டு திட்டங்களையும் கொண்டுள்ளது. ஆனால், நமது இளைஞர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பிரிவினர் எடுத்துக்கொள்ளும் அக்கறை மற்றும் ஈடுப்பாடுகளை பொறுத்தே திட்ட வெற்றிகள் அமையும், நமது அபிலாசைகள் நிறைவேறும் என்றார் அவர்.
மாநிலம் முழுவதும் வேலை வாய்ப்பு சந்தைகளை ஆண்டு முழுவதும் ஏற்பாடு செய்து நடத்தி வருகிறோம். இது உடனடி வேலை வாய்ப்புகளை வழங்குவதுடன், சிறந்த தொழில் விருப்ப தேர்வுக்கான வாய்ப்பும் வழங்குகிறது. அதனுடன் திறமையான பணியாளர்களை உருவாக்குவதற்கும் உள்ளூர் இளைஞர்களின் சந்தைப்படுத்தலை அதிகரிப்பதற்கும் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றார்.
சிலாங்கூரில் TVET திட்டங்களை வழங்கும் முக்கிய நிறுவனங்களில் சிலாங்கூர் தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு மையம் (STDC) அடங்கும். மேலும், கோலா சிலாங்கூரில் அமைந்துள்ள INPENS சர்வதேச கல்லூரி, திறன் மேம்பாட்டுத் துறையில் (JPK) அங்கீகரிக்கப்பட்ட தேசிய தொழில் திறன் தரநிலைகளின் (NOSS) அடிப்படையில் தொழில் திறன் பயிற்சியை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இந்தத் திட்டம் TVET துறையில் தங்கள் படிப்பைத் தொடர விரும்பும் B40 மற்றும் M40 குழுக்களைச் சேர்ந்தவர்களின் நிதிச் சுமையை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவர்கள் பகுதி நேரமாகவும் தங்கள் கல்வியை தொடர் இந்த தளங்கள் மூலம் நிறைய வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமில்லாமல், இந்த மாநிலத்தில் விண்வெளி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான பல குறுகியக் காலக் கல்விகளும் பிரத்தியேகமாக மாணவர்களுக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது, ஆனால் நமது இளைஞர்கள் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்பவர்கள் வழங்கப்படும் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும் என்று வீ.பாப்பாராய்டு வலியுறுத்தினார்.
இதற்கிடையில், நல்ல எதிர்காலத்தையும் அதிக வருமானத்தையும் வழங்கும் படிப்புகளை தேர்ந்தெடுத்து , தொழில் நுட்ப கல்விகளை பெற மாணவர்கள் மட்டுமின்றி வேலை செய்யும் நமது இளைஞர்களும் திவேட் கல்வி வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினார்.
இது போன்ற நடவடிக்கைகள் ஒரு வேலையில் இருந்துக் கொண்டே அதில் அல்லது பேறு ன்றில் தனித்திறமையை வளர்க்க உதவுகிறது. அதே வேளையில் எதிர்காலத்தில் குடும்ப வருமானத்தை அதிகரிக்கவும், வறுமை பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபட வழி அமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இறுதியாக, ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வில் சிறந்த விளங்க தேடல் இருக்க வேண்டும் என்றார். இதன் மூலம், போட்டி தன்மை நிறைந்த இந்த உலகில் காலத்திற்கேற்றவாறு மக்கள் தங்களை தயார் படுத்தி கொண்டு பீடுநடை போட இயலும்.


