புத்ராஜெயா, ஜூலை 22 - மாதம் 1,700 வெள்ளியை குறைந்தபட்ச சம்பளமாக வழங்க வகை செய்யும் 2024ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதிய ஆணை (பி.ஜி.எம்.) ஊழியர்களின் எண்ணிக்கை வேறுபாடின்றி நாடு முழுவதும் உள்ள அனைத்து முதலாளிகளுக்கும் ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
எந்தவொரு பணியாளரும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச விகிதத்திற்குக் கீழே அடிப்படை சம்பளத்தைப் பெறுவதை உறுதிசெய்ய முதலாளிகள் நிறுவனத்தின் சம்பள அமைப்பு முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மனிதவள அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
புதிய விகிதம் முன்னதாக 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வேளையில் ஐந்து ஊழியர்கள் மற்றும் அதற்கு மேற்பட்டவர்களைக் கொண்ட முதலாளிகளுக்கும் 2020
'மலேசிய தரநிலை தொழில் வகைப்பாடு' முறையின் கீழ் வகைப்படுத்தப்பட்ட தொழில்முறை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முதலாளிகளுக்கும் பிப்ரவரி 1 தேதி முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டதாக அமைச்சு தெரிவித்தது.
வரும் 2025 ஆகஸ்ட் 1 முதல் விதிவிலக்கு இல்லாமல் முன்னர் ஒத்திவைப்பு காலத்தை அனுபவித்தவர்கள் உட்பட அனைத்து முதலாளிகளும் மாதம் 1,700 வெள்ளி சம்பளம் என்ற குறைந்தபட்ச ஊதிய உத்தரவைப் பின்பற்ற வேண்டும் என்பது இதன் பொருளாகும் என அது குறிப்பிட்டது.
இவர்களில் குடியுரிமை பெறாத தொழிலாளர்கள் மற்றும் பயிற்சி ஒப்பந்தத் தொழிலாளர்களும் அடங்குவர். ஆனால் வீட்டு பணியாளர்களுக்கு இது பொருந்தாது.
பொருந்தக்கூடிய சட்டங்களின்படி தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து முதலாளிகளும் இந்த குறைந்தபட்ச விகிதத்திற்கு இணங்க வேண்டும் என்று அமைச்சு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
குறைந்தபட்ச ஊதிய உத்தரவைப் பின்பற்றத் தவறுவது 2011ஆம் ஆண்டு தேசிய ஊதிய ஆலோசக மன்ற சட்டத்தின் (சட்டம் 732) கீழ் குற்றமாகும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் முதலாளிகளுக்கு ஒவ்வொரு பணியாளருக்கும் 10,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகும் குற்றம் தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் 1,000 வெள்ளி கூடுதலாக அபராதம் விதிக்கப்படும். மேலும் மீண்டும் மீண்டும் குற்றங்கள் செய்தால் அதிகபட்ச அபராதம் 20,000 வெள்ளி அபராதம் அல்லது ஐந்து ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.


