ஹாய் போங், ஜூலை 22 - இன்று வியட்நாமில் விஃபா புயல் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.
அந்நாட்டின் கடலோர மாநிலங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அவரச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த புயலினால் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என்று அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
மேலும் வட வியட்நாமில் உள்ள மலைப்பகுதிகளில் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அந்த மையம் தெரிவித்திருக்கிறது.
கூடுதலாக, தலைநகர் ஹனோய் உட்பட சில நகரங்களில் வெள்ளம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
அனைத்து மீன்பிடி படகுகள், சரக்குக் கப்பல்கள் மற்றும் சுற்றுலாப் படகுகள் கரைக்குத் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதிக ஆபத்துள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற வேண்டும் என்றும் வியட்நாம் பிரதமர் ஃபாஹ்ம் மின் சின் வலியுறுத்தியிருக்கிறார்.
கடந்த ஆண்டு வீசிய யாகி புயலினால் வியட்நாமில் சுமார் 300 பேர் இறந்த நிலையில் 330 கோடி அமெரிக்க டாலர் மதிப்பிலான சேதம் ஏற்பட்டது.
--பெர்னாமா


