ஷா ஆலம், ஜூலை 22 - பாலஸ்தீனத்திற்கு மனிதாபிமான உதவிகளை அனுப்புவதற்கான ஆற்றல் மலேசியாவிற்கு உள்ளதோடு அந்நாட்டிற்குள் நுழைவதற்கான அனுமதிக்காக அது இன்னும் காத்திருக்கிறது.
மலேசியாவிடம் உபகரணங்கள், நிதி வளம் மற்றும் வசதிகள் இருந்த போதிலும் இஸ்ரேலிய ஆட்சியாளர்களால் தடுக்கப்படுவதால் விநியோகத்தைத் தொடர முடியவில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
நாங்கள் கத்தார் வழியாக (உதவிப் பொருள் விநியோகம்) செய்தோம். ஆனால் ஒரு குழு மட்டுமே வெற்றி பெற்றது. இரண்டாவது குழு தடுக்கப்பட்டது. இப்போது எங்களிடம் திறன் உள்ளது. ஆனாலும் உதவியைத் தொடர முடியாத நிலையில் உள்ளோம் என அவர் சொன்னார்.
நூற்றுக்கணக்கான லோரிகள் காத்திருந்தன. ஆனால் அவற்றில் சில அழிக்கப்பட்டுவிட்டன. நாம் மிகவும் மனவளர்ச்சி இல்லாத ஒரு நாட்டைக் கையாளும் நிலையில் இருக்கிறோம் என்று அவர் இன்று மக்களவையில் பிரதமரின் கேள்வி நேரத்தின் போது கூறினார்.
இதற்கிடையில், அமெரிக்காவின் பரஸ்பர வரி தொடர்பான பேச்சுவார்த்தை இன்னும் நிலுவையில் இருந்தாலும் மேற்காசியாவில் நிலவும் கொந்தளிப்பு குறித்த தனது உறுதியான நிலைப்பாட்டிலிருந்து மலேசியா ஒருபோதும் பின்வாங்காது என்று அன்வார் உறுதிபடக் கூறினார்.
பாலஸ்தீனப் பிரச்சனையில் பிரேசிலின் தலைவர் வெளிப்படையானப் பேச்சு மற்றும் வளரும் நாடுகளின் பிரிக்ஸ் குழுவில் பிரேசில் பங்கேற்பைத் தொடர்ந்து அந்நாட்டின் மீதான வரியை 50 விழுக்காடாக உயர்த்த அமெரிக்கா எடுத்த நடவடிக்கையை அன்வார் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவுடன் இறுதி பேச்சுவார்த்தைகளை நாங்கள் இன்னும் எட்டவில்லை. ஆனால் எங்களுக்கு ஒரு பெரிய பரிசீலனை உள்ளது. அது மின்சாரம் மற்றும் மின்னணு துறையாகும். நமது பொருள்கள் அவர்களுக்கும் தேவை என்றார் அவர்.
இவ்விவகாரம் சுமூகம முறையில் தீர்க்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். கருத்துக்களைக் கூறுவதற்கான எங்களின் உறுதியான நிலைப்பாடு மாறாது என்று மூவார் உறுப்பினர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் எழுப்பிய துணை கேள்விக்கு பதிலளித்த அவர் கூறினார்.


