(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 22 - சிலாங்கூரில் மிக உயர்ந்த அளவில் காற்று மாசுபாட்டு குறியீட்டு (ஏ.பி.ஐ.) பதிவான பகுதிகளில் ஒன்றாகப் பந்திங் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடிக்கும்படி அத்தொகுதி மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
தங்களின் சொந்த ஆரோக்கியத்திற்கும் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்கும் எப்போதும் முக்கியத்துவம் வழங்குமாறு அப்பகுதி மக்களை பந்திங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வீ.பாப்பாராய்டு வலியுறுத்தினார்.
புகைமூட்டப் பிரச்சனை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு வெளிப்புற நடவடிக்கைகளை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினருமான அவர் கேட்டுக் கொண்டார்.
வெளியே செல்ல வேண்டிய அவசியமிருந்தால் N95 வகை முகக் கவசத்தை பயன்படுத்துவதோடு வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் எப்போதும் மூடப்பட்டிருப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும். நீடித்த இருமல், மூச்சுத் திணறல் அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறவும்.
ஆரோக்கியம் என்பது நமது பொதுவான பொறுப்பு என அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் துறையின் கீழுள்ள காற்று மாசுபாட்டு குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (ஏ.பி.எம்.எஸ்.) அண்மைய தரவுகளின்படி ஆரோக்கியமற்ற ஏ.பி.ஐ. குறியீட்டைப் பதிவு செய்த பகுதிகளில் பந்திங் வட்டாரமும் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி பந்திங் வட்டாரத்தில் ஏ.பி.ஐ. குறியீடு 155ஆகப் பதிவாகியிருந்தது.
101 முதல் 200 வரையிலான ஏ.பி.ஐ. குறியீடு ஆரோக்கியமற்றவை என வகைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 51 முதல் 100 வரையிலான குறியீடு மிதமானதாகவும் 0 முதல் 50 வரையிலான குறியீடு சிறப்பானதாகவும் கருதப்படுகின்றன.
சமீபத்திய ஏ.பி.ஐ. அளவீடுகளை https://eqms.doe.gov.my/A என்ற இணைப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்


