கோலாலம்பூர், ஜூலை 22- பட்டத்தின் நூல் பட்டு மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் கழுத்தில் காயங்களுக்குள்ளானார். இச்சம்பவம் ஸ்ரீ டாமன்சாரா நோக்கிச் செல்லும் மத்திய சுற்றுச் சாலை இரண்டில் கெப்போங் மெட்ரோபாலிட்டன் லேக் பார்க் அருகே நேற்று மாலை நிகழ்ந்தது.
மாலை 6.00 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 27 வயதான பாதிக்கப்பட்ட நபர் சாலையின் மத்திய தடத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பட்டத்தின் நூல் அவரது உடலில் பட்டு பின்னர் கழுத்தில் சிக்கி அறுந்ததாகக் கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை தலைவர் ஏசிபி முகமது ஜம்சூரி முகமட் இசா கூறினார்.
இச்சம்பவத்தில் கழுத்தில் காயங்களுக்கு ஆளான பாதிக்கப்பட்ட ஆடவர் செலாயாங்கில் உள்ள ஒரு போலிகிளினிக்கில் சிகிச்சை பெற்றார் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த புகார் தொடர்பில் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 80வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
முன்னதாக, பாதிக்கப்பட்ட மோட்டார் சைக்கிளோட்டி பதிவு செய்த 41 வினாடி காணொளி சமூக ஊடகங்களில் வைரலானது. பட்டத்தின் நூல் பட்டதால் அவரது கழுத்தில் ஏற்பட்ட காயங்களை அந்த காணொளிக் காட்சி காட்டுகிறது.
சம்பந்தப்பட்ட சாலையின் அருகே பட்டம் பறக்கவிட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்டவர் காவல்துறையினரிடம் அந்த இளைஞர் கோரிக்கை விடுத்தார்.


