ஷா ஆலம், ஜூலை 21- அடுத்த மாதம் கொண்டாடப்படும் தேசிய தினத்தை முன்னிட்டு கோத்தா அங்கிரிக் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் 1,000 ஜாலுர் ஜெமிலாங் கொடிகள் விநியோகிக்கப்படுகின்றன.
அனைத்து வயதினர் மத்தியிலும் ஒற்றுமை மற்றும் நாட்டின் மீதான பற்றுதல் உணர்வை வளர்ப்பதற்கான அடையாளமாக இந்த தேசியக் கொடி ஒப்படைப்பு சுற்றுப்பயணத் தொடர் நடத்தப்படுவதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி கூறினார்.
நாட்டின் 68வதுதேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு n நேற்று காலை ஷா ஆலமில் உள்ள செக்சன் 6, பாசார் மோடன் சந்தையில் கோத்தா அங்கிரிக் தொகுதி நிலையிலான ஜாலுர் ஜெமிலாங் கொடிகளை விநியோகிக்கும் பயணத் தொடரை நான் தொடங்கினேன்.
வர்த்தகர்கப் பிரதிநிதிகளுடன் காலை உணவை உட்கொண்டப் பிறகு, வரும் ஆகஸ்டு மாதம் அனுசரிக்கப்படவிருக்கும் சுதந்திர மாத கொண்டாட்டத்தை முன்னிட்டு சந்தையை அலங்கரிக்கப் பயன்படுத்தப்படும் வகையில் ஜாலூர் ஜெமிலாங் கொடிகளை வர்த்தகர்கள் சங்க பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தேன் என்று அவர் தனது முகநூல் பதிவில் கூறினார்.
இதனிடையே, இவ்வாண்டு முழுவதும் சங்கத்தின் நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு உதவும் வகையில் பாசார் மோடன் செக்சன் 6 வர்த்தக சங்கத்தின் தலைவரிடம் 5,000 வெள்ளி பங்களிப்பையும் நஜ்வான் வழங்கினார்.
கோத்தா அங்கிரிக் சட்டமன்றத்தின் வருடாந்திர முயற்சிகளில் ஒன்றான இந்தத் திட்டம், மக்களிடையே தேசபக்தி உணர்வைத் தூண்டுவதையும் தேசிய அடையாளத்தில் பெருமை உணர்வை வளர்ப்பதையும் சமூக ஈடுபாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


