கோலாலம்பூர், ஜூலை 21- தலைநகர், ஜாலான் ஹாங் துவா அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஆடவர் ஒருவர் கருகி மாண்டார்.
இந்த தீவிபத்து தொடர்பில் இன்று அதிகாலை 2.54 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து ஹாங் துவா தீயணைப்பு நிலையத்திலிருந்து 14 பேர் கொண்ட தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மையம் அறிக்கை ஒன்றில் கூறியது.
அந்த அடுக்குமாடி கட்டிடத்தின் 10 வது மாடியில் உள்ள 6x6 மீட்டர் பரப்பளவிலான அந்த வீடு முற்றாகச் சேதமடைந்தது-
அந்த வீட்டில் ஏற்பட்ட தீ விடியற்காலை 3.10 மணிக்கு முற்றாக அணைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வீட்டில் சோதனை மேற்கொண்ட தீயணைப்பு வீரர்கள் 50 வயது மதிக்கத்தக்க ஆடவர் குளியலறையில் கிடப்பதைக் கண்டனர்.
இறந்தவரின் உடல் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. தீக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.