புத்ராஜெயா, ஜூலை 21- வரி தொடர்பில் அமெரிக்காவுடன் நடத்தப்படும்
பேச்சு வார்த்தை உள்பட நாட்டின் கொள்கைகளைப் பாதிக்கும் எந்தவொரு
நெருக்குதலுக்கும் மலேசியா ஒருபோதும் அடிபணியாது என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடனான வர்த்தகம் அதிகமாக இருந்த போதிலும் வரி
தொடர்பான பேச்சுவார்த்தையில் மலேசியா ரெட்லைன் எனப்படும் கூடிய
பட்ச எல்லை வரம்பைக் கொண்டுள்ளது. வெளி தரப்பினர் ‘பாகுபாடானது‘
எனக் கூறினாலும் பூமிபுத்ரா கொள்கைகள் விஷயத்தில் யாரும் இடையூறு
ஏற்படுத்த முடியாது என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவுடனான இந்த பேச்சுவார்த்தையில் உள்நாட்டு
நிறுவனங்களுக்கான வாய்ப்புகளும் தற்காக்கப்பட வேண்டும் என்று
நிதியமைச்சருமான அவர் வலியுறுத்தினார்.
சந்தை எல்லையை விரிவுபடுத்துவதற்கு ஏதுவாக சீனா மற்றும் ஆசியான்
நாடுகளுடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவற்கும் நாட்டின் நலன்
பாதுகாக்கப்படுவதற்கும் மலேசியா விரிவான மற்றும் உறுதியான
அணுகுமுறையைக் கடைபிடிக்கும் என அன்வார் சொன்னார்.
வரி தொடர்பான பேச்சுவார்த்தையில் இதுவே நமது ரெட் லைன் ஆகும்.
ஆகவேதான் நமது பேச்சுவார்த்தை விரிவானதாகவும் உறுதியானதாகவும்
உள்ளது. நாம் அனைத்து நாடுகளுடனும் வர்த்தகத்தில் ஈடுபடுவோம்,
ஆனால் நமக்கு நெருக்குதல் தரக்கூடிய நிபந்தனைகளை அவர்கள்
விதிக்கக் கூடாது என்றார் அவர்.
இன்று இங்கு பிரதமர் துறை ஊழியர்களுடனான மாதாந்திர ஒன்று கூடும
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அன்வார் இதனைத்
தெரிவித்தார்.
உலக நாடுகள் குறிப்பாக பிரேசில், எகிப்துடனான வலுவான உறவுகள்
நாட்டின் பொருளதார நிலையை வலுப்படுத்தக்கூடிய வியூக பொருளாதார
வாய்ப்பினை வழங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.


