NATIONAL

காற்றின் தரம் மோசமடைந்தால் வெளிப்புற நடவடிக்கைகளை நிறுத்த சிலாங்கூரிலுள்ள பள்ளிகளுக்கு உத்தரவு

21 ஜூலை 2025, 5:56 AM
காற்றின் தரம் மோசமடைந்தால் வெளிப்புற நடவடிக்கைகளை நிறுத்த சிலாங்கூரிலுள்ள பள்ளிகளுக்கு உத்தரவு

ஷா ஆலம், ஜூலை 21 - நாடு முழுவதும் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், தங்கள் பகுதியில் காற்று மாசுபாட்டு குறியீடு (ஏ.பி.ஐ.) 100 க்கும் மேல் அதாவது  ஆரோக்கியமற்ற அளவைப் பதிவு செய்தால் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்குமாறு சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கு ஏதுவாக பள்ளிகள் ஏற்கனவே  அமலில் உள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று மாநிலக் கல்வி இயக்குநர் ஜாஃப்ரி அபு கூறினார்.

மாவட்ட கல்வி அலுவலகங்கள்  உட்பட அனைத்துப் பள்ளிகளுக்கும் தங்கள் பகுதியில் ஏ.பி.ஐ. குறியீடு  ஆரோக்கியமற்ற அல்லது ஆபத்தான அளவை எட்டினால் எடுக்க வேண்டிய தேவையான நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டும் ஒரு சுற்றறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட கல்வி அலுவலகங்களும்  பள்ளிகளும் அந்த சுற்றறிக்கையை கவனமாக மதிப்பாய்வு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும் காற்றின் மாசுபாட்டுக் குறியீடு  101 என்ற ஆரோக்கியமற்ற அளவை எட்டினால் வெளிப்புற நடவடிக்கைகளை நடத்துவதைத் தவிர்க்கவும் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார் .

ஏ.பி.ஐ. குறியீடு  201 என்ற மிகவும் ஆரோக்கியமற்ற அளவை எட்டினால் மட்டுமே பள்ளிகளை  மூட அனுமதிக்கப்படும். மேலும் மாநில கல்வித் துறை தற்போதைய நிலைமை மற்றும் ஏ.பி.ஐ. குறியீடுகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என அவர் குறிப்பிட்டார்.

இன்று காலை 9.00 மணி நிலவரப்படி காற்றின்  தரம் நாடு முழுவதும் உள்ள கண்காணிப்பு நிலையங்களில் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவாகியுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை கூறியிருந்தது.

காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவான  பகுதிகள் பின்வருமாறு-

தெமர்லோ, (பகாங்)- 156

பந்திங், (சிலாங்கூர்) - 155

நீலாய், (நெகிரி செம்பிலான்) - 155

கெமமான், (திரங்கானு)- 153

ஜோஹான் செத்தியா, (சிலாங்கூர்) - 152

செராஸ், (கோலாலம்பூர்) - 151

புத்ராஜெயா - 124

101 முதல் 200 வரையிலான ஏ.பி.ஐ. குறியீடு   ஆரோக்கியமற்றதாகவும்    51 முதல் 100 வரையிலான குறியீடு மிதமானதாகவும் 0 முதல் 50 வரையிலான குறியீடு  சிறப்பானதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை நிலவரப்படி, மூன்று பகுதிகளில்  காற்றின் தரம் நல்ல நிலையில் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் 57 இடங்கள் மிதமான அளவில் இருந்தன.

முன்னதாக, எல்லை தாண்டிய புகைமூட்டம்  தற்போது தீபகற்ப மலேசியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள பல மாநிலங்களைப் பாதித்துஉளாளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறையின் தலைமை  இயக்குநர் டாக்டர் முகமட் ஹிஷாம் முகமட் அனிப்

முன்னதாக அறிவித்திருந்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.