(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 21- பண்டான் இண்டா, எம்.பி.ஏ.ஜே. மண்டபத்தில்
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிலாங்கூர் மாநில அரசின்
ஜெலாஜா ஜோப் கேர் நிகழ்வில் ஆட்டிஸம் குறைபாடு கொண்ட
இளைஞர் ஒருவர் தன் தாயாருடன் வேலை தேடி வந்தார்.
இந்த ஜெலாஜா ஜோப்கேர் நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்க
வந்த மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் வீ.பாப்பராய்டு, அந்த பதினேழு வயது இளைஞரையும் அவரின்
தாயாரையும் சந்தித்து வருகைக்கான நோக்கத்தை பரிவுடன் கேட்டறிந்தார்.
மாநில அரசின் வேலை வாய்ப்பு சந்தைக்கு பதிவு செய்வதில் அந்த
குடும்ப மாதுவுக்கு உதவும்படி தமது அதிகாரிகளைப் பணித்த அவர்,
எனினும் 18 வயதைத் தாண்டினால் மட்டுமே வேலைக்கு விண்ணப்பிக்க
முடியும் எனக் கூறினார்.
இத்தகைய மாற்றுத் திறனாளி தரப்பினருக்கு உதவுவதில் மாநில அரசு
கொண்டுள்ள கடப்பாட்டை எடுத்துரைத்த அவர், இந்நோக்கத்தின்
அடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்டு 25ஆம் தேதி ஷா ஆலம் மாநாட்டு
மையத்தில் மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்தியேக வேலை வாய்ப்பு
கண்காட்சியை தாங்கள் எற்படு செய்துள்ளதாகக் கூறினார்.
மாற்றுத் திறானளிகளின் திறமையை வெளிக்கொணர்வதற்கு ஏதுவாக
ஆள்பலச் சந்தையின் நடப்புத் தேவையைப் கருத்தில் கொண்டு இத்தகைய
தரப்பினர் மீது உரிய கவனம் செலுத்தப்பட என்று அவர் வலியுறுத்தினார்.
உள்ளடங்கிய மற்றும் பரிவுமிக்க சமுதாயத்தை உருவாக்குவதற்கு
ஏதுவாக குறைந்தது ஒரு விழுக்காட்டு வேலை வாய்ப்புகளை மாற்றுத்
திறனாளிகளுக்கு வழங்கும்படி தனியார் துறையினரைத் தாம் கேட்டுக்
கொண்டுள்ளதாகப் பாப்பாராய்டு தெரிவித்தார்.
இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் 25 முதலாளிகள் கலந்து கொண்டு
மூவாயிரத்திற்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்கினர்.
பண்டான் இண்டா சட்டமன்ற உறுப்பினரும் அடிப்படை வசதிகள் மற்றும்
விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம்
ஹஷிமும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்.


