ஜப்பான், ஜூலை 21 - ஜப்பான் பொது பூப்பந்து போடியின் இறுதி சுற்றில் சீனாவைச் சேர்ந்த உலகின் முதல் நிலை மகளிர் இரட்டையரான லியு ஷெங் ஷுடான் நிங் உடன் மோதிய நாட்டின் மகளிர் இரட்டையரான எம்.தீனா-பெர்லி தான் ஜோடியின் வெற்றியாளர் பட்டத்தை வெல்லும் கனவு ஈடேறாமல் போனது.
தோக்கியோவின், ஜிம்னாசியம் மெட்ரோபோலிடன் அரங்கில் நடைபெற்ற இந்த போட்டியில் உலகின் மூன்றாம் நிலையில் உள்ள எம்.தீனா-பெர்லி தான், 45 நிமிடங்களில் 15-21, 14-21 என்ற புள்ளிகளில் தோல்வியை தழுவினர்.
இது தோல்வியாக இருந்தாலும், 2008ஆம் ஆண்டில் ஜப்பான் பொது பூப்பந்து போட்டியின் இறுதி சுற்றில் இரண்டாம் இடத்தைப் பிடித்த நாட்டின் புகழ்பெற்ற இரட்டையரான சின் ஏய் ஹுய் - வோங் பெய் திதி சாதனையை இந்த ஜோடி ஈடு செய்துள்ளது.
கடந்த மே மாதம் தாய்லாந்து பொது பூப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற எம்.தீனா-பெர்லி தான் ஜோடி, இந்தோனேசியா மாஸ்டர்ஸ் மற்றும் பொது பூப்பந்து போட்டிக்குப் பிறகு இப்பருவத்தில் மூன்றாவது முறையாக இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.
-- பெர்னாமா


