கோலாலம்பூர், ஜூலை 21 - சுபாங் ஜெயாவில் உள்ள ஒரு சொகுசு பங்களாவில் நேற்று முன்தினம் நடைபெற்ற "தனிப்பட்ட கேளிக்கை விருந்தில்" பங்கேற்ற தனியார் உயர்கல்விக் கழக மாணவர்கள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட 38 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றவியல் புலனாய்வுப் பிரிவு நள்ளிரவு 12.30 மணியளவில் நடத்திய இந்த அதிரடி நடவடிக்கையில் கஞ்சா என சந்தேகிக்கப்படும் 6.5 கிராம் போதைப்பொருள் மற்றும் 1.7 கிராம் கெத்தமைனையும் போலீசார் பறிமுதல் செய்ததாக சுபாங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி வான் அஸ்லான் வான் மாமட் கூறினார்.
இந்நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட அனைவரும் 18 முதல் 27 வயதுக்குட்பட்டவர்கள். இதில் 13 வெளிநாட்டினரும் அடங்குவர். அவர்களில் 21 முதல் 25 வயதுக்குட்பட்ட நான்கு பேர் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் நேற்றிரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் 12 பேர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
போதைப் பொருளைப் பயன்படுத்தியவர்களில் ஒன்பது உள்ளூர்வாசிகளும் மூன்று வெளிநாட்டினரும் அடங்குவர். அவர்கள் தற்போது மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.
குற்றச் செயல்கள் குறித்து, குறிப்பாக போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத தனியார் விருந்துகள் தொடர்பான தகவல்களை தொடர்ந்து வழங்குமாறு பொதுமக்களை வான் அஸ்லான் கேட்டுக் கொண்டார்.


