கூச்சிங், ஜூலை 21- இங்குள்ள செமரா பாடி, மஹாட் தாஹ்ஃபிஸ்
ஹுஸ்னுல் கோடிமா சமயப் பள்ளியின் நிரந்தரக் கட்டுமானத்தின் கூரையில் தீப்பற்றியதில் 20 மாணவர்கள் மற்றும் நான்கு சமய ஆசிரியர்கள்
அதிர்ஷ்டவசமாக உயிர்த் தப்பினர்.
இச்சம்பவம் தொடர்பில் மாலை 5.47 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து பெட்ரா ஜெயா மற்றும் படுங்கான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு தீயணைப்பு வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சரவாக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இந்த சம்பவத்தில் நிரந்தர கட்டமைப்பான தஸ்ஃபிஸ் கட்டிடத்தின் கூரையில் தீ விபத்து ஏற்பட்டது. எனினும், கட்டிடத்தின் தரை தளம் பாதிக்கப்படவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது சம்பவ இடத்திலிருந்த சாட்சிகளின் கூற்றுகள் வழி தெரியவந்தது.
20 மாணவர்கள் மற்றும் நான்கு சமய ஆசிரியர்கள் உட்பட அனைவரும் எந்த காயமும் இல்லாமல் தப்பினர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தீயை முழுமையாக அணைக்கும் நடவடிக்கை மாலை 6.48 மணிக்கு முழுமையாக முடிவடைந்தது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் இழப்பின் மதிப்பு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.


