புத்ராஜெயா, ஜூலை 19- ஆடவர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றிய ஆட்சியாளர்கள் குறித்த தவறான உள்ளடக்கத்தை மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்.சி.எம்.சி.) விசாரித்து வருகிறது.
தலைமை நீதிபதி நியமனம் குறித்து ஆட்சியாளர்களின் மாநாடு முன்கூட்டியே முடிவை எடுத்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் உள்ளடக்கத்தில் இருப்பதாக எம்.சி.எம்.சி. இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்த குற்றச்சாட்டுகள் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு நாட்டின் சட்ட அமைப்பின் நேர்மை மற்றும் அரச அமைப்பின் அதிகாரத்திற்கு பாதிப்பைஏற்படுத்துகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் டாங் வாங்கி மாவட்ட காவல் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க சம்பந்தப்பட்ட நபர் அழைக்கப்பட்டதாக எம்.சி.எம்.சி. தெரிவித்தது.
இந்தப் புகார் தொடர்பில் 1998ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் 233 வது பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 500,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது.
மதம், இனம் மற்றும் அரச அமைப்பு (3ஆர்) ஆகியவற்றைத் தொடும் எந்தவொரு தவறான உள்ளடக்கத்தையும் பரப்ப வேண்டாம் என்று எம்.சி.எம்.சி. பொதுமக்களுக்கு நினைவூட்டுகிறது.


