ஈப்போ, ஜூலை 19- இன்று அதிகாலையில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் தங்கள் வீட்டை சோதனை செய்தபோது அந்நிய நாட்டுப் பெண் ஒருவர் தனது கணவரையும் இரண்டு சிறு பிள்ளைகளையும் விட்டுவிட்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் துணிந்தார்.
இங்குள்ள பெர்சியாரான் பனோரமா லாப்பாங்கன் பெர்டானாவில் உள்ள ஒரு கட்டுமான பகுதியில் மலேசிய குடிநுழைவுத் துறை பேராக் மாநில பொது செயல்பாட்டுப் படையுடன் இணைந்து நடத்திய சோதனையின் போது சுலாவசியைச் சேர்ந்த அந்தப் பெண் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாத காரணத்தால் தப்பியோடிவிட்டதாக நம்பப்படுகிறது.
இந்த நடவடிக்கையின் போது அவரின் கணவரும் இரண்டு மற்றும் மூன்று வயதுடைய அவர்களது இரண்டு பிள்ளைகளும் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டனர். அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண்ணைக் கண்டுபிடிக்கும் முயற்சி பலனளிக்கவில்லை.
இந்த நடவடிக்கையின் போது சோதனை செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரில் சம்பந்தப்பட்ட அந்த குடும்பமும் அடங்கும்.
சோதனை செய்யப்பட்ட மொத்த எண்ணிக்கையில், சுமார் 120 பேர் 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டம் (சட்டம் 155) மற்றும் 1963ஆம் ஆண்டு குடிநுழைவு விதிமுறைகளின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டனர் என்று பேராக் மாநில குடிநுழைவுத் துறை இயக்குநர் டத்தோ ஜேம்ஸ் லீ கூறினார்.
கடப்பிதழ் குற்றங்கள், அதிக காலம் தங்கியது மற்றும் செல்லாத பாஸ்களைப் பயன்படுத்தியது உள்ளிட்டக் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதை எங்கள் நடவடிக்கை நோக்கமாகக் கொண்டிருந்தது என அவர் சொன்னார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் மேல் நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சின் வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளையில் ஆவணங்கள் இல்லாத குழந்தைகள் சிறப்பு முகாமிற்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.


