கோலாலம்பூர், ஜூலை 19- பாங்கி, பண்டார் புக்கிட் மகோத்தா அருகே பெரியவர்களின் கவனிப்பின்றி சாலையோரத்தில் சுற்றித் திரிந்த மூன்று மற்றும் ஆறு வயதுடைய இரண்டு சிறுவர்கள் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
உள்நாட்டவர்களான அச்சிறார்களை பொதுமக்கள் நேற்று காலை 11.57 மணியளவில் பாங்கி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தனது துறைக்கு தகவல் கிடைத்தாக காஜாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி நாஸ்ரோன் அப்துல் யூசோஃப் கூறினார்.
அச்சிறார்கள் நல்ல நிலையில் இருப்பதும் பராமரிப்பாளர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறியதும் ஆரம்பகட்ட விசாரணையில் கண்டறியப்பட்டது. குடியிருப்புக்கு அருகிலுள்ள இடத்தில் பொதுமக்கள் அவர்களைக் கண்டுபிடித்தனர் என்று அவர் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர் தொடர்பு கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் பிற்பகல் சுமார் 2 மணியளவில் பாங்கி காவல் நிலையத்தில் ஆஜரானதாகக் கூறிய அவர், பின்னர் அவ்விருவரும் பாதுகாப்பாக அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்
என்றார்.
இதனைத் தொடர்ந்து, குழந்தைகள் பராமரிப்பில் அலட்சியம் காட்டியதற்காக 2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரணைக்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்கு பராமரிப்பாளர் உட்பட ஐந்து நபர்களை போலீசார் அழைத்ததுள்ளதாக நாஸ்ரோன் கூறினார்.
பொதுமக்கள், குறிப்பாக பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள், சிறார்களின் பாதுகாப்பில் அதிக கவனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் பராமரிப்பு விஷயத்தில் ஒருபோதும் அலட்சியமாக இருக்கக்கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார்.


