ஜப்பான், ஜூலை 18 - ஜப்பானில் நடைபெற்ற பூப்பந்து போட்டியில் நாட்டின் கலப்பு இரட்டையரான கோ சூன் ஹுவாட் ஷெவோன் லாய் ஜெமி ஜோடி வெற்றிப் பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
கணவன் - மனைவி தம்பதியரான கோ சூன் ஹுவாட்-ஷெவோன் லாய் ஜெமி மூன்றாம் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூரின் டெர்ரி ஹீ-ஜின் யூ ஜியா இணையருடன் மோதினர்.
அதில் 32 நிமிடங்களில் 21-14, 21-17 என்ற நேரடி செட்களில் உலகின் ஆறாம் நிலையில் இருக்கும் மலேசிய ஜோடி வெற்றிப் பெற்றது.
இதனிடையே, உலகின் நான்காம் நிலையில் உள்ள நாட்டின் மற்றொரு இரட்டையரான சென் தாங் ஜி - டோ ஈ வெய் ஜோடியும் வெற்றிகரமாக அடுத்த சுற்றில் கால் வைத்தது.
இந்தோனேசியாவின் ஜாஃபார் ஹிடயாதுல்லா - ஃபெலிஷா பசாரிபு ஜோடியை 17-21, 21-16, 21-12 என்ற புள்ளிகளில் அவர்கள் தோற்கடித்தனர்.
மற்றொரு கலப்பு இரட்டையருக்கான ஆட்டத்தில் நாட்டின் ஹோ பாங் ரொன்-செங் சு யின் ஜோடியினர், 21-9, 21-6 என்ற புள்ளிகளில் சீனாவிடம் தோல்வியைத் தழுவினர்.
-- பெர்னாமா


