ஷா ஆலம், ஜூலை 18 - கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்.எஸ்.டி.) விரிவாக்கம் மீது மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சின் (கே பி.டி.என்.) சிலாங்கூர் கிளை 120 வணிகர்களுக்கு அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு விலைக் கட்டுப்பாடு மற்றும் இலாப எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிக்கைகள் விலை நிர்ணயம் மற்றும் செலவுகள் குறித்த விவரங்களைச் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதே தவிர, வர்த்தகர்களை தண்டிக்கும் நோக்கிலானவை அல்ல என்று மாநில தலைமை அமலாக்க அதிகாரி முகமட் ஹனிசாம் கெச்செக் கூறினார்.
ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா, காஜாங் மற்றும் கோம்பாக் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள 120 வளாகங்கள் மற்றும் 416 பொருட்களை உள்ளடக்கிய இந்த சோதனை ஓப்ஸ் கெசான் 4.0 இயக்கத்தின் கீழ் நடத்தப்பட்டது.
எஸ்.எஸ்.டி. உயர்வை கிரகித்துக் கொள்ள முடியும் என்று வணிகர்கள் எங்களிடம் தெரிவித்தனர். மேலும் எங்கள் சோதனையில் அதிக இலாபம் ஈட்டுதல் அல்லது விலை உயர்வுக்கான எந்த ஆதாரமும் காணப்படவில்லை.
விலைச் சிட்டைகள் காணாமல் போவது தொடர்பான தொடர்ச்சியான சிக்கல்களைத் தவிர விலை உயர்வு குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வப் புகாரும் வரவில்லை
என்று ஹனிசம் கூறினார்.
எஸ்.எஸ்.டி. யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலைத்தன்மையை உறுதி செய்ய கண்காணிப்பு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.


