ஷா ஆலம், ஜூலை 18 — இங்குள்ள ஷா ஆலம் விரைவுச் சாலையில் (கெசாஸ்) இன்று காலை ஒரு கொள்கலன் லோரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில் சாலையில் இரசாயனக் கசிவு ஏற்பட்டது.
ஷா ஆலம் நோக்கி வந்த கொண்டிருந்த போது நிகழ்ந்த அந்த விபத்தில் லோரியின் ஓட்டுநர் லேசான காயங்களுக்கு ஆளானதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து காலை 10.25 மணிக்கு தமது துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 15 நிமிடங்களில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்தை அடைந்ததாக அவர் கூறினார்.
அந்த கொள்கலன் லோரியில் திரவமய சல்பர், கால்சியம் கார்பனேட் மற்றும் டைட்டானியம் ஆக்சைடு உள்ளிட்ட ரசாயனப் பொருட்கள் தலா 1,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 ஏபிசி பீப்பாய்களில் வைக்கப்பட்டிருந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
விபத்தில் சிக்கிய லோரி ஓட்டுநர் பொது மக்களால் காப்பாற்றப்பட்டார். அவர் லேசான காயங்களுக்கு ஆளானார் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் ஷா ஆலம் மற்றும் அண்டாலாஸ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 14 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்களோடு ஹஸ்மாட் குழுவும் ஈடுபட்டதாக அவர் கூறினார்.


