புத்ராஜெயா, ஜூலை 18 - போலி விசாவை பயன்படுத்தி நாட்டிற்குள்
நுழையு முயன்ற குற்றத்திற்காக ஏழு ஆப்கானிஸ்தான் பிரஜைகளை
எல்லைக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (ஏ.கே.பி.எஸ்.) கைது
செய்துள்ளது.
அந்த ஆப்கான் பிரஜைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 13)
காலையும் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) இரவும் இரு குழுக்களாக
அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையம் வழியாக
நாட்டிற்குள் வந்துள்ளனர்.
உளவுத் தகவலின் அடிப்படையில் விமான நிலையத்தில் இருந்த
ஏ.கே.பி.எஸ். அதிகாரிகள் அவர்களின் பயண ஆவணங்களை
சோதனையிட்டதாக அந்நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில்
கூறியது.
பதினைந்து முதல் 36 வயது வரையிலான இரு சிறார்கள் மற்றும் ஐந்து
பெரியவர்கள் அடங்கிய அவ்விரு குழுவினரும் உஸ்பெகிஸ்தான் வழியாக
போலி விசாக்களைப் பெற்றது தொடக்க க் கட்ட விசாரணையில் தெரிய
வந்துள்ளது என்று அது குறிப்பிட்டது.
மலேசியாவை இறுதி பயணத் தடமாகப் பயன்படுத்தி ஈரானுக்கு
தப்பியோட தாங்கள் திட்டமிட்டிருந்ததாக அந்த ஆப்கான் பிரஜைகள்
விசாரணை அதிகாரிகளிடம் கூறியுள்ளனர்.
போலி பயண ஆவணங்களைப் பயன்படுத்தி நாட்டிற்குள் நுழைய முயன்ற
அவர்களை ஏ.கே.பி.எஸ். தடுத்து நிறுத்தியது.
நாட்டின் எல்லைப் பாதுகாப்பை உயரிய நிலையில் வைத்திருப்பதை
உறுதி செய்வதில் ஏ.கே.பி.எஸ். காட்டி வரும் உயர்ந்த பட்ச கடப்பாட்டை
இந்த துரித நடவடிக்கை பிரதிபலிப்பதாகவும் சட்டவிரோதமாக நாட்டிற்குள்
நுழைய முயலும் அந்நியக் குடியேறிகள் விஷயத்தில் ஒருபோதும் விட்டுக கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது என்றும் அந்நிறுவனம் கூறியது.


