NATIONAL

டிவிட்டரில் இஸ்லாத்தை அவமதித்ததாக கிராபிக் டிசைனர் மீது குற்றச்சாட்டு

18 ஜூலை 2025, 8:05 AM
டிவிட்டரில் இஸ்லாத்தை அவமதித்ததாக கிராபிக் டிசைனர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், ஜூலை 18-  இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில்  கருத்துக்களை பதிவிட்டதன் வழி இணைய வசதிகளை தவறான  முறையில் பயன்படுத்தியதாக கிராஃபிக் டிசைனர் ஒருவர்  மீது இன்று  இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் தேதி  'லியின் யியோ' என்ற சுயவிவரக் கணக்கை கொண்ட  டிவிட்டர் செயலியைப்  பயன்படுத்தி பிறரைத் தொந்தரவு செய்யும் நோக்கத்துடன் அவமதிக்கும் பதிவுகளை உருவாக்கி பரிமாற்றம் செய்ததாக   47 வயதான யியோ லி யின் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதே ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு வங்சா மாஜுவில் உள்ள புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் இந்தப் பதிவு கண்டுபிடிக்கப்பட்டது.

1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின்  233(1)(ஏ)  பிரிவின்  கீழ் அவ்வாடவர் மீது  குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

இச்சட்டப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 50,000 வரை அபராதம் அல்லது ஒரு வருடம் வரை  சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும். மேலும், குற்றம் நிரூபிக்கப்பட்ட பிறகு குற்றம் தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் 1,000 வெள்ளி  அபராதம் விதிக்கப்படும்.

குற்றம் சாட்டப்பட்டவரை  ஒரு நபர் உத்தரவாதத்துடன் 7,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி இஸ்ரலிசாம் சனுசி, வரும் செப்டம்பர் 8 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

அரசு தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் ஃபைசா கலீலா ஜபேரி வழக்கை நடத்திய வேளையில் வழக்கறிஞர் ராஜ்சூரியன் பிள்ளை இயோ சார்பில் ஆஜரானார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.