(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 18- அண்மையில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்ட
தொழிற்சாலையின் ஊழியர்கள் எதிர்நோக்கி வரும் வேலை தொடர்பான
பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைளை மனிதவள அமைச்சு
முன்னெடுத்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 30ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் ரவாங், பண்டார்
கன்றி ஹோம்ஸில் அமைந்துள்ள கேர்ஃபீல் காட்டன் இண்டஸ்ட்ரிஸ் (ம)
சென். பெர்ஹாட் நிறுவனம் பெரும் சேதத்திற்குள்ளானது. இதனால் அதில்
வேலை செய்து வந்த 80 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களில்
சுமார் 60 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொழிற்சாலை ஊழியர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு
பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றுக்கு உரிய தீர்வு காணும் நோக்கில்
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சார்பாக அவரின் பிரதிநிதி டிக்கம்
லுர்ட்ஸ் நேற்று கள வருகை மேற்கொண்டார். ரவாங் மனித வள
அலுவலகத்தின் அதிகாரிகள் மற்றும் ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா
வேய் கியாட்டின் சிறப்பு அதிகாரி தினேஷ் செல்வராஜூ ஆகியோரும்
இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

சம்பந்தப்பட்ட தொழிற்சாலை தீவிபத்தில் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து
உள்நாட்டினான 80 தொழிலாளர்களை அதன் நிர்வாகம் சுபாங்கில்
செயல்படும் தனது மற்றொரு கிளை நிறுவனத்திற்கு வேலைக்கு
அனுப்பியதாக டிக்கம் குறிப்பிட்டார்.
அத்தொழிலாளர்களுக்கு தொடக்கத்தில் போக்குவரத்து அலவன்சை
வழங்கிய அந்நிறுவனம் பின்னர் அதனை நிறுத்தி விட்டது. இதனால்
செவிலன அதிகரிப்பு மற்றும் நேர விரயம் உள்ளிட்ட பிரச்சினைகளால்
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் அதிருப்தியை அமைச்சிடம்
தெரிவித்ததாக அவர் சொன்னார்.
இவ்விவகாரம் தொடர்பில் ஊழியர்கள் முன்வைத்த புகாரை மனிதவள
இலாகா விசாரித்து வருகிறது. அதே சமயம் பாதிக்கப்பட்ட
தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் (சொக்சோ) எஸ்.ஐ.பி.
எனப்படும் தொழிலாளர் காப்புறுதி முறை வாயிலாக உதவிகளை
வழங்குவதற்கும் அருகிலுள்ள தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்புகளை
ஏற்படுத்தி தருவதற்கும் முயற்சிகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
என்று அவர் குறிப்பிட்டார்.


