(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 18- கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்
வீ.கணபதிராவ் பொதுப்பணி அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்ட நந்தா
லிங்கியுடன் நேற்று சிறப்பு சந்திப்பு நடத்தினார்.
பொதுப்பணி அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் அமைச்சின்
அதிகாரிகள் மற்றும் கிள்ளான் மாவட்ட பொதுப்பணி இலாகாவின்
பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
கிள்ளான் நாடாளுமன்றத் தொகுதியில் நிலவும் அடிப்படை வசதிகள்
தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழிவகைகளை ஆராயும்
நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டதாக கணபதிராவ் தனது பேஸ்புக்
பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளார்.
சாலைகளை தரம் உயர்த்துவது, பிரதான வடிகால்களுக்குச் செல்லும்
கால்வாய்களை சீரமைப்பது, தெரு விளக்குகளை பராமரிப்பது, சாலை
சமிக்ஞை விளக்குகளை பொருத்துவது உள்ளிட்ட தொகுதி மக்களின்
நலன் சார்ந்த விஷயங்கள் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக
அவர் தெரிவித்தார்.
தாங்கள் முன்வைத்த பிரச்சினைகளை பரிவுடன் கேட்டறிந்து அவற்றுக்கு
உரிய முறையில் தீர்வு காண்பதாக வாக்களித்த அமைச்சருக்கு தாங்கள்
நன்றி தெரிவித்துக் கொள்வதாக கணபதிராவ் குறிப்பிட்டார்.


