கோத்தா திங்கி, ஜூலை 18 - தேசிய சேவை பயிற்சி திட்டம் (பி.எல்.கே.என்) 3.0-இன் இரண்டு தொடர்களில் இருந்து சுமார் 30 விழுக்காட்டு பங்கேற்பாளர்கள் பல்வேறு காரணங்களுக்காகப் பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை.
அவர்கள் கொடுத்த முக்கிய காரணங்களில் உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் பல்கலைக்கழகத்தில் படிப்பை தொடர்வது ஆகியவை அடங்கும் என்று தற்காப்பு அமைச்சர், டத்தோ ஸ்ரீ முஹமட் காலிட் நோர்டின் தெரிவித்தார்.
கோத்தா திங்கியில் உள்ள மலேசியா பகாங் சுல்தான் அப்துல்லா பல்கலைக்கழகத்தில் கெம்பாரா லெஸ்தாரி கோத்தா திங்கி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பின்னர், டத்தோ ஸ்ரீ முஹமட் காலிட் இவ்வாறு கூறினார்.
இந்த பி.எல்.கே.என் 3.0 இன்னும் சோதனை கட்டத்தில் உள்ளதாகவும், அடுத்த ஆண்டு மட்டுமே முழுமையாக செயல்படுத்த தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
45 நாள் பயிற்சி காலத்தை கொண்டிருக்கும் இத்திட்டம், பங்கேற்பாளர்கள் இடமிருந்து நேர்மறையான கருத்துக்களைப் பெற்றது, குறிப்பாக ஒழுக்கம் மற்றும் சுயமரியாதையை வளர்ப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கருதப்படுகிறது.


