பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18: தற்போது நடமாடுவதில் சிரமத்தை எதிர்கொள்ளும் நீரிழிவு நோயாளி ஒருவருக்கு நெகிழ்வான மருத்துவ படுக்கையை கின்றாரா தொகுதி சமூக சேவை மையம் வழங்கியது. இது நோயாளிக்கு வாழ்க்கையில் புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாக அவர் குடும்பத்தினர் கூறினர்.
தற்போது வேலை செய்ய முடியாத நிலையில் உள்ள அப்துல் அஜீஸ் சனுசி, கின்றாரா தொகுதி சமூக சேவை மையம் வழங்கிய உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த நெகிழ்வான படுக்கை அவரது அன்றாட வாழ்க்கையை எளிதாக்கியுள்ளது என்றார்.
"நான்கு மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்ட பின் கின்றாரா சமூக சேவை மையத்திடமிருந்து சக்கர நாற்காலியை நன்கொடையாக பெற்ற பின் இப்பொழுது மீண்டும் இந்த நெகிழ்வான படுக்கையை பெற்றதாக," அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
தனது மனைவியின் நாசி லெமாக் விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தும் அவர்கள், கின்றாரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸி ஹானின் உதவிக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
அப்துல் அஜீஸின் மனைவி மஸ்லிஹா சையத்தின் விண்ணப்பத்தைத் தொடர்ந்து இந்த உதவி வழங்கப்பட்டதாகவும், உபகரணங்கள் அவசரத் தேவையாக இருந்ததால் உடனடியாக அங்கீகரிக்கப் பட்டதாகவும் இங் ஸி ஹான் கூறினார்.
தகுதியான ஒவ்வொரு விண்ணப்பமும் பின்னணியைப் பொருட்படுத்தாமல், மக்களைப் பராமரிக்கும் கொள்கையின்படி விரைவில் செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.


