ஈப்போ, ஜூலை 18- தைப்பிங்கில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஓப் தாரிங் பல்மா சோதனை நடவடிக்கையின் போது கிட்டத்தட்ட 10 லட்சம் வெள்ளி மதிப்புள்ள கச்சா எண்ணெய் சம்பந்தப்பட்ட மோசடி முயற்சி முறியடிக்கப்பட்டது.
மூன்று உள்ளூர் ஆடவர்கள் மேற்கொண்ட இந்த முயற்சியை பொது நடவடிக்கைப் படையின் வடக்கு படைப்பிரிவு பொது (பி.ஜி.ஏ.) வெற்றிகரமாகக் கண்டறிந்தது.
மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை மேற்கொள்ளப்பட்ட இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில் பி ஜி ஏ. வடக்கு படைப்பிரிவின் புலனாய்வுப் பிரிவு, மலேசிய செம்பனை எண்ணெய் வாரியத்தின் வடக்கு பிராந்தியம் மற்றும் தைப்பிங் மாவட்ட காவல் தலைமையகம் ஆகிய தரப்புகள் இடம் பெற்றிருந்தன.
சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு டேங்கர் லோரி செல்வதைக் கண்ட தமது துறையினர் ஜாலான் தைப்பிங்–பாகான் செராய் வரை அதனைப் பின்தொடர்ந்து சென்றதாக வடக்குப் படைப்பிரிவு பிஜிஏ கட்டளை அதிகாரி எஸ்ஏசி ஷாரோம் ஹாஷிம் கூறினார்.
அங்கு சந்தேக நபர்கள் இரண்டு டேங்கர் லோரிகளில் இருந்து மற்றொரு லோரிக்கு கச்சா செம்பனை எண்ணெயை மாற்றுவது கண்டறியப்பட்டது.
மேலும் அங்கு நடத்தப்பட்டச் சோதனையில் எண்ணெயை மாற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களுடன் லோரியில் தலா 200 லிட்டர் கொள்ளளவு கொண்ட 10 நீல பீப்பாய்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்நடவடிக்கையில் இரண்டு டேங்கர் லோரிகள், ஒரு லோரி மற்றும் மூன்று கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டன. இது தவிர, மொத்தம் 75,400 கிலோகிராம் எடையுள்ள கச்சா செம்பனை எண்ணெயும் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட பொருளின் மொத்த மதிப்பு 975,200 வெள்ளியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஷாரோம் கூறினார்.
சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் வடக்கு பிராந்திய செம்பனை எண்ணெய் வாரியத்திடம் மேல் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டதாக அவர் கூறினார்.


