கோலாலம்பூர், ஜூலை 18- மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ வான் அகமது ஃபாரிட் வான் சாலே நாட்டின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் அலுவலகம் இன்று ஒரு அறிக்கையில் இதனைக் கூறியது.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின் 122பி ஷரத்தின் (1)வது பிரிவின் கீழ் பிரதமரின் ஆலோசனையின் பேரில் ஆட்சியாளர்கள் மாநாட்டுடன் கலந்தாலோசித்த பிறகு மாட்சிமை தங்கிய பேரரசரின் ஒப்புதலுடன் இந்த நியமனம் செய்யப்பட்டதாக அது அறிவித்தது.
இதற்கிடையில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ அபு பாக்கார் ஜெய்ஸ் நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில் ஓய்வுபெறும் சபா மற்றும் சரவாக் தலைமை நீதிபதிக்கு பதிலாக மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி டத்தோ அசிசா நவாவி நியமிக்கப்பட்டார்.
நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, பதவியேற்பு மற்றும் பதவிப் பிரமாணத்தில் கையொப்பமிடுதல் மற்றும் விசுவாசப் பிரமாணம் ஆகியவை மாட்சிமை தங்கிய பேரரசர்முன்னிலையில் வரும் ஜூலை 28ஆம் தேதி இஸ்தானா நெகாராவில் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் கடந்த ஜூலை 2ஆம் தேதி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக 62 வயதான வான் அகமது ஃபாரிட் 17 ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப ்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 3 ஆம் தேதி டான் ஸ்ரீ அபாங் இஸ்கந்தர் அபாங் ஹாஷிம் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் பதவிக்கான காலியிடத்தை 63 வயதான அபு பாக்கார் நிரப்புவார். அதே சமயம், ஜூலை 25 ஆம் தேதி ஓய்வு பெறும் டான் ஸ்ரீ அப்துல் ரஹ்மான் செப்லிக்குப் பதிலாக 63 வயதான அசிசா நியமிக்கப்படுவார்.


