இஸ்கந்தார் புத்ரி, ஜூலை 17- இங்குள்ள சுங்கை பூலாய், கெலாங் பத்தாவில் கடந்த வாரம் விபத்துக்குள்ளான அரச மலேசிய போலீஸ் படையின் ஹெலிகாப்டர் இன்று காலை 11.00 மணியளவில் மீட்கப்பட்டது. மேல் விசாரணைக்காக அது சிலாங்கூரில் உள்ள சுபாங் விமான நடவடிக்கைக் குழு (பி.ஜி.யு.) மையத்திற்கு கொண்டு செல்லப்படும்.
இந்த சம்பவம் தொடர்பில் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (பி.எஸ்.கே.யு.) விரிவான விசாரணை நடத்தும் என்று உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குத் துறையின் கட்டளை அதிகாரி டத்தோ நூர் ஷாம் முகமது ஜானி தெரிவித்தார்.
பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்பின் வாயிலாக ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்களை மீட்கும் பணி விரைவாக மேற்கொள்ளப்பட்டது. மேலும் முழுமையான விசாரணை நடத்தப்படுவதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
9M-PHG பதிவு எண் கொண்ட அந்த AS355N ரக ஹெலிகாப்டரை கடலிலிருந்து மீட்கும் நடவடிக்கை இன்று அதிகாலை முதல் பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டது.
ஒரு கிரேன் கப்பல் மற்றும் போலீஸ் படையின் பல தளவாடங்களைப் பயன்படுத்தி ஹெலிகாப்டர் மீட்கப்பட்டது.
கடந்த வியாழக்கிழமை கெலாங் பாத்தா கடல்சார் படகுத் துறையில் மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் ஒத்துழைப்பை உள்ளடக்கிய பலதரப்பு அணுசக்தி பாதுகாப்பு கண்டறிதல் பயிற்சியில் பங்கேற்ற போது அந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.


