கோலாலம்பூர், ஜூலை 17- டாம்ஷிக் மீது இஸ்ரேல் மேற்கொண்ட
சமீபத்திய தாக்குதலை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்
வன்மையாக கண்டித்துள்ளார். இந்நடவடிக்கை சிரியாவின்
இறையாண்மையை மீறியுள்ளதோடு எந்த பாவம் அறியாத அப்பாவி
மக்களின் உயிரையுப் பறித்துள்ளது என்று அவர் கூறினார்.
இஸ்ரேலின் இந்த தாக்குதல் அனைத்துலகச் சட்டங்கள் அப்பட்டமாக
மீறப்பட்டதையும் இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையே கடந்த 1974ஆம்
ஆண்டு செய்து கொள்ளப்பட்ட எல்லை பிரிப்பு ஒப்பந்தத்தை
புறக்கணிக்கும் வகையிலும் உள்ளது என அவர் தனது பேஸ்புக் பக்கத்தில்
வெளியிட்ட பதிவில் தெரிவித்தார்.
சிரியா கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக துன்பங்களை அனுபவித்து
வருகிறது. அமைதியை அனுபவிக்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது.
மாறாக, வன்முறை அல்லது அந்நிய சக்திகளிடம் சிக்கி துன்புறும் நிலை
அவர்களுக்கு ஏற்படக்கூடாது என்றார் அவர்.
மலேசியா சிரியா மக்களுக்கு ஆதரவாக இருப்பதோடு இத்தகைய
அத்துமீறல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும்
வலியுறுத்துகிறது. மேலும், மனிதாபிமானம் மற்றும் இறையாண்மை
கோட்பாடுகளை கட்டிக்காப்பதில் அனைவரின் கடப்பாடும் அவசியம்
என்றும் வலியுறுத்துகிறது என்று அன்வார் சொன்னார்.
சிரியாவின் தற்காப்பு அமைச்சு மற்றும் அதிபர் மாளிகையின் அருகிலுள்ள
பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் நேற்று வான் வழித் தாக்குதலை
மேற்கொண்டது.
ட்ரூஸ் சிறுபான்மை மக்களை காக்கும் நோக்கில் இந்த தாக்குதலைத்
தாங்கள் நடத்தியாகக் கூறிய இஸ்ரேல் அப்பகுதியிலிருந்து சிரியா நாட்டுப்
படைகள் வெளியேறாவிட்டால் தாக்குதல் தொடரும் எனவும்
எச்சரித்துள்ளது.


