ஷா ஆலம், ஜூலை 17- தேசிய நிர்வாகத்தில் சட்ட பரிபாலன
முறையையும் நீதியின் கோட்பாடுகளையும் நிலைநிறுத்த நாட்டின்
தலைமை நீதிபதிகளை நியமனம் செய்வதில் வெளிப்படைத் தன்மையும்
மிகுந்த கவனப் போக்கும் கடைபிடிக்கப்படுவது அவசியம் என்று மேன்மை
தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா வலியுறுத்தினார்.
இன்று தலைநகரில் நடைபெற்ற 269வது ஆட்சியாளர்கள் மாநாட்டிற்கு
தலைமை தாங்கியப் பிறகு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர்
இவ்வாறு கூறினார்.
தலைமை நீதிபதி மேல் முறையீட்டு நீதிமன்றத் தலைவர், சபா மற்றும்
சரவா தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் பதவி
உள்பட நீதித் துறையின் உயர் பதவிகளுக்கு நியமனம் செய்வது குறித்து
இந்த ஆட்சியாளர்கள் மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
சட்ட விதிகளை முறையாக கடைபிடிப்பதன் அவசியத்தை மேன்மை
தங்கிய சுல்தான் இந்த கூட்டத்தின் போது வலியுறுத்தினார்.
நீதித் துறையின் மூத்த உறுப்பினர்களை நியமிக்கும் போது
நிர்ணயிக்கப்பட்ட விதிகள் மற்றும் நடைமுறைகள் அரசியலமைப்புச்
சட்டத்தின் 122பி பிரிவுக்கு ஏற்ப உறுதியாக கடைபிடிக்க வேண்டும்
என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
பிரதமரின் ஆலோசனையின் பேரிலும் ஆட்சியாளர்கள் மாநாட்டில்
கலந்தலாலோசிக்கப்பட்ட பின்னரும் தலைமை நீதிபதி, மேல் முறையீட்டு
நீதிமன்றத் தலைவர் மற்றும் இதர முக்கிய நீதித்துறை பதவிகளுக்கு
நியமனம் செய்யும் அதிகாரம் மாட்சிமை தங்கிய பேரரசருக்கு உள்ளது
என்ற ஜூலை 10ஆம் தேதியிட்ட இஸ்தானா நெகாராவின் கடிதத்தை தாம்
முழுமையாக ஆதரிப்பதாக சுல்தான் குறிப்பிட்டார்.
கூட்டரசு அரசியலமைப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ள இந்த நடைமுறை
வெளிப்படையாகவும் அதிக கவனத்துடனும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தேசிய நிர்வாகத்தித்ன அடித்தளமாக விளங்கும் நீதித் துறை
கோட்பாடுகளை நிலை நிறுத்த இது அவசியம் என அவர் கூறினார்.


