கோத்தா பாரு, ஜூலை 17- பாசீர் மாஸ், கம்போங் அலோர்
மெங்குவாங்கில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிரடிச் சோதனையை
மேற்கொண்ட பெங்காலான் குபோர் மூன்றாவது பிராந்திய கடல் போலீஸ்
குழுவினர் (பி.பி.எம்.) வெற்றிகரமாக முறியடித்தனர்.
அதிகாலை 4.00 மணியளவில் கண்காணிப்புப் பணிகளை
மேற்கொண்டிருந்த பி.பி.எம். குழுவினர் மூன்று டன் லோரி ஒன்று சபாங
அம்பாட் பகுதியிலிருந்து தும்பாட் கம்போங் அனா நோக்கி செல்வதைக்
கண்டதாக மூன்றாம் பிராந்திய கட்டளை அதிகாரி ஏசிபி ஜூலாபெண்டி
ஹசான் கூறினார்.
அந்த லோரியை பி.பி.எம். உறுப்பினர்கள் துரத்திச் சென்று பிடிக்க
முயன்றனர். எனினும், அதன் ஓட்டுநர் லோரியை நிறுத்த மறுத்து
வேகத்தை அதிகப்படுத்தினார்.
இந்நிலையில் டோண்டோ எனப்படும் கடத்தல்காரர்களின் பாதுகாப்புக்
கும்பலைச் சேர்ந்தவர்கள் இரு வாகனங்களில் பி.பி.எம். அதிகாரிகளின்
வாகனத்தை மறிக்க முயன்றனர். இந்த சம்பவத்தில் மோட்டார்
சைக்கிளில் வந்த பி.பி.எம். உறுப்பினர் அவர்களின் வாகனத்தால்
மோதப்படுவதிலிருந்து அதிர்ஷ்டவசமாகத் தப்பினார்.
இதனைத் தொடர்ந்து அந்த லோரி மற்றும டோண்டாவின் வாகனங்களின்
சக்கரங்களை நோக்கி அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இருப்பினும்
நிற்காமல் சென்ற லோரி பாசீர் மாஸ் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து
கார் நிறுத்துமிடத் கம்பத்தை மோதியது என்று அவர் கூறினார்.
லோரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி தலைமறைவான நிலையில் அந்த
லோரியில் நடத்தப்பட்ட சோதனையில் ஸூன் கிங் எனும் சிகிரெட்டுகள்
அடங்கிய 114 அட்டைப் பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தம் 11
லட்சத்து 40 ஆயிரம் சிகிரெட்டுகள் அடங்கிய அந்த பெட்டிகள் அண்டை நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார். பிடிபட்ட லோரி உள்பட கடத்தல் பொருள்களின் மொத்த மதிப்பு 23 லட்சம் வெள்ளியாகும் என அவர் குறிப்பிட்டார்.


