ஷா ஆலம், ஜூலை 17 - சிலாங்கூர் மாநிலத்தில் கடந்தாண்டு முதல்
இதுவரை 800 கிலோ மீட்டர் தொலைவுக்கு பழைய நீர் குழாய்கள்
மாற்றப்பட்டுள்ளன. குழாய் உடைவது மற்றும் நீர் விநியோகத் தடை
போன்ற பிரச்சனைகளைக் களையும் நோக்கில் பழைய குழாய்களை
மாற்றும் பணியை ஆண்டுக்கு 300 கிலோ மீட்டராக அதிகரிக்கும் மாநில
அரசின் முயற்சியின் பலனாக இந்த அடைவு நிலை பதிவு
செய்யப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள 5,200 கிலோ மீட்டர் குழாய்களை
மாற்றுவதற்கு மாநில அரசு மேற்கொண்டு வரும் விரிவான திட்டத்தின்
ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது என்று அடிப்படை
வசதிகள் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹஷிம்
கூறினார்.
முன்பு ஆண்டுக்கு 150 கிலோ மீட்டர் தொலைவுக்கு பழைய குழாய்களை
மாற்றி வந்தோம். இப்போது அதன் அளவை 300 கிலோ மீட்டராக
அதிகரித்துள்ளோம். எஸ்பெஸ்தோஸ் சிமிண்ட் குழாய்களின் ஆயுள்காலம்
20 ஆண்டுகள் வரை மட்டுமே ஆகும். ஆனால் 40 ஆண்டுகளுக்கும் மேல்
பயன்படுத்தப்பட்டு வருவதால் அவை உடையும் சம்பவங்கள் நிகழ்கின்றன
என்று அவர் சொன்னார்.
பழைய குழாய்களை மாற்றுவதற்கு 40 கோடி முதல் 45 கோடி வெள்ளி
வரை செலவு பிடித்தாலும் மாற்றப்படும் குழாய்களின் தொலைவை 300
கிலோ மீட்டர் வரை உயர்த்துவதற்கு நாங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளோம்
என்றார் அவர்.
குழாய்கள் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளின் ஊடாகச்
செல்வது மற்றும் நிலத்தடியில் இதர அடிப்படை வசதிகள் தொடர்பான
கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது போன்றவை குழாய்கள் மாற்றும் பணிக்கு
பெரும் சவாலாக இருப்பதாக அவர் சொன்னார்.
ஆகவே, இத்தகைய மாற்றுதல் தொடர்பான பணிகளுக்கான
விண்ணப்பங்களை முன்கூட்டியே முடிக்க வேண்டும். அதாவது
அடுத்தாண்டிற்கான விண்ணப்பங்கள் இவ்வாண்டிலேயே அங்கீகரிக்கப்பட
வேண்டும் என நான் உத்தரவிட்டுள்ளேன் என்றார் அவர்.


