மலாக்கா, ஜூலை 16 - இங்குள்ள செங் தொழில்நுட்ப பூங்காவில் செயல்படும் ஒரு விளையாட்டுப் பொருள் கடையில் மலாக்கா போலீசார் நேற்று நடத்திய சோதனையில் 105,000 வெள்ளிக்கும் அதிக மதிப்புள்ள 351 போலி துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஒரு வருடத்திற்கும் மேலாக இயங்கி வந்த வளாகத்தில் காலை 10.22 மணிக்கு நடத்தப்பட்ட சோதனையின் போது அதன் பராமரிப்பாளரான 42 வயது நபரையும் போலீசார் கைது செய்ததாக மலாக்கா மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஜூல்கைரி முக்தார் தெரிவித்தார்.
போலி ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்கு 1960 ஆம் ஆண்டு ஆயுதச் சட்டத்தின் 36வது பிரிவின் கீழ் முறையான உரிமம் வர்த்தகரிடம் இல்லாததால் அனைத்து கைத்துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும், 'ஏர்சாஃப்ட் கன்' எனப்படும் பொம்மை துப்பாக்கிகள் உண்மையான கைத்துப்பாக்கிகளை ஒத்திருப்பதால் அவற்றை விற்க அனுமதிக்கப்படவில்லை.
இந்த வளாகத்தில் முன்னர் போலி ஆயுதங்களை விற்பனை செய்வதற்கான உரிமம் இருந்தது. ஆனால் அது புதுப்பிக்கப்படவில்லை.
இதனால் போலீசார் அந்த வளாகத்தை சோதனை செய்தனர். விற்பனை செய்ய அனுமதிக்கப்படாத உண்மையான துப்பாக்கிகளை போலிருக்கும் ஆயுதங்கள் கடையில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததை அச்சோதனையில் நாங்கள் கண்டறிந்தோம் என அவர் குறிப்பிட்டார்.
அசல் துப்பாக்கிகளைப் போலிருக்கும் பொம்மைத் துப்பாக்கிகளை விற்பனை செய்வதற்கான உரிமங்களை காவல்துறை வழங்காது. ஏனெனில்
அத்தகைய ஆயுதங்களை வாங்குவோர் அதனை தவறாகப் பயன்படுத்தி கொள்ளையடித்தல், மிரட்டி பணம் பறித்தல் அல்லது குற்றவியல் மிரட்டல் செய்வார்கள் என அஞ்சப்படுகிறது என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
மலாக்கா மாநிலத்தில் நேரடியாக அல்லது இணையம் வழி 200 முதல் 300 வெள்ளி வரையிலான விலையில் விற்பனை செய்வதற்காக நாட்டின் வடக்கில் உள்ள எல்லை வாயில் வழியாக துப்பாக்கி கொண்டு வரப்பட்டது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஒவ்வொரு துப்பாக்கியும் சுமார் 20 முதல் 30 வெள்ளி விலையில் வாங்கப்பட்டதாகவும் இந்த விற்பனை வர்த்தகர்களுக்கு பல மடங்கு இலாபத்தை அளித்ததாகவும் அவர் கூறினார்.


