(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 16 - பந்திங், ஸ்ரீ சீடிங் சாலையில் ஏற்பட்டுள்ள மண்
சரிவு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கையை மனித வளம்
மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர்
வீ.பாப்பராய்டு முன்னெடுத்துள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளை
உள்ளடக்கிய பிரத்தியேக சந்திப்பை இங்குள்ள தமது
அலுவலகத்தில் அவர் இன்று நடத்தினார்.
இச்சந்திப்பில் எஸ்.பி.எக்ஸ். எக்ஸ்பிரஸ் சென். பெர்ஹாட், ஸ்ரீ லங்காட்
பால்ம் ஆயில் மில் சென். பெர்ஹாட் நிறுவனப் பிரதிநிதிகள், கோல
லங்காட் மாவட்ட வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை பொறியாளர்கள்,
மற்றும் பந்திங் சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தின் பொறுப்பாளர்கள்
கலந்து கொண்டனர்.
கோல லங்காட் நகராண்மைக் கழக உறுப்பினர் ரஷினா அஸ்ராட் மற்றும்
கிராமத் தலைவரும் கலந்து கொண்ட இந்த சந்திப்பில் அப்பகுதியில்
வசிக்கும் மக்களின் பாதுகாப்பு மற்றும் வடிகால் முறையின் சீரான
செயல்பாட்டை உறுதி செய்வதற்கான குறுகிய கால மற்றும் நீண்ட காலத்
திட்டங்கள் குறித்து விவாதிக்கபட்டது.
நிலைமை மேலும் மோசமடைந்து கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதைத்
தவிர்க்கும் வகையில் முன்கூட்டியே உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தாங்கள் கடப்பாடு கொண்டுள்ளதாகப் பந்திங் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பாப்பாராய்டு தெரிவித்தார்.
சாலையைப் பயன்படுத்துவோரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக
முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மேற்கொண்ட கோல லங்காட்
மாவட்ட பொதுப்பணித் துறைக்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக
அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.
பொதுப்பணித் துறையின் இந்த நடவடிக்கை அங்குள்ள தொழிற்சாலைக்கு
செம்பனைப் பழங்களைக் கொண்டுச் செல்லும் லோரிகளின் பாதுகாப்பை
உறுதி செய்யும் அதேவேளையில் விபத்துகள் நிகழ்வதையும் தடுக்கும்
என்றார் அவர்.


