(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 16 - கோத்தா கெமுனிங் தொகுதியில் குறிப்பாகப் புக்கிட்
நாகா மற்றும் புக்கிட் கெமுனிங் பகுதிகளில் நீண்ட காலமாக நிலவி
வரும் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்காக நேற்று சிறப்பு
ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.
அடிப்படை வசதிகள் மற்றும் விவசாயத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டத்தோ ஹிஷாம் ஹஷிம் தலைமையில் மாநில அரசு
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கோத்தா
கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், ஷா ஆலம் மாநகர்
மன்றம், வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை, பொதுப்பணி இலாகா,
மாவட்ட நில அலுவலகம் உள்ளிட்ட துறைகளின் பிரதிநிதிகள் கலந்து
கொண்டனர்.
வெள்ளப் பிரச்சனைக்கு குறுகியக் கால அடிப்டையில் தீர்வு காணும்
நோக்கிலான குயிக் வின் திட்ட அமலாக்கம் உள்ளிட்ட பல்வேறு
விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
கோத்தா கெமுனிங் தொகுதியில் தாமான் ஸ்ரீ மூடாவுக்கு அடுத்த அடிக்கடி
வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதியாகப் புக்கிட் கெமுனிங் வட்டாரம்
விளங்குகிறது. குறிப்பாக ஜாலான் பத்து பாத்தா மற்றும் தாமான் டேசா
கெமுனிங் ஆகிய பகுதிகள் கனமழை பெய்யும் போது ஒவ்வொரு முறையும்
வெள்ளப் பிரச்சனையை எதிர்கொள்கின்றன.


