புத்ரா ஜெயா, ஜூலை 16 - தேசிய மோசடி மறுமொழி மையத்தின்
(என்.எஸ்.ஆர்.சி.) நடவடிக்கைகளை அரச மலேசிய போலீஸ் படை
(பி.டி.ஆர்.எம்.) இனி அதிகாரப்பூர்வமாக வழி நடத்தும். இணைய
மோசடிகளுக்கு எதிரான பதில் நடவடிக்கைகளை வலுப்படுத்தக்கூடிய
இந்த மையத்தின் அமலாக்கம் உடனடியாக நடைமுறைக்கு
வருகிறது.
இணைய வழி நிதி மோசடிச் சம்பவங்கள் அச்சமூட்டும் வகையில்
அதிகரித்து வருவதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒப்புதல் அளித்துள்ளதாக
டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார்.
தேசிய நிதி குற்றத் தடுப்பு மையம், அரச மலேசிய போலீஸ் படை, பேங்க்
நெகாரா மலேசியா, தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையம் ஆகியவற்றை
உள்ளடக்கிய இந்த என்.எஸ்.ஆர்.சி. அமைப்பை வழி நடத்தக்கூடிய
பிரத்தியேக அமைப்பு எதுவும் இதுவரை இல்லாதிருந்ததாக அவர்
குறிப்பிட்டார்.
இந்த என்.எஸ்.ஆர்.சி. மையம் 997 என்ற தொலைபேசி எண்களின்
வாயிலாக சுமார் 160 கோடி வெள்ளி நிதி இழப்பு சம்பந்தப்பட்ட 500
தொலைபேசி அழைப்புகளை தினசரி சராசரியாகப் பெற்று வருவதாக
அவர் சொன்னார்.
உள்துறை அமைச்சின் மாதாந்திர சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டப்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். இந்த
நிகழ்வில் உள்துறை அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ அவாங்
அலிக் ஜெமான் மற்றும் தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர்
டான்ஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சை ஆகியோர் கலந்து கொண்டனர்.
தற்போது இந்த என்.எஸ்.ஆர்.சி.யின் பணியை வர்த்தக குற்றப்புலனாய்வுத்
துறை மேற்கொண்டு வருவதாகக் கூறிய சைபுடின், இந்த மையத்தின்
செயல்பாடுகளை கவனிக்க 139 புதிய பதவிகள் உருவாக்கப்படும் என்றார்.


