ஷா ஆலம், ஜூலை 16 - சிலாங்கூர் மாநிலத்தின் ஸ்மார்ட் இன்டெலிஜென்ட் பார்க்கிங் (எஸ்.ஐ.பி.) எனப்படும் விவேக நுண்ணறிவு வாகன நிறுத்துமிடக் கட்டணத் திட்டத்தின் தொடக்கக் கட்டத்தில் ஊராட்சி மன்றங்கள் பார்க்கிங் வருவாயில் சிறிது அளவு சரிவை சந்திக்கக்கூடும் என்பதை சிலாங்கூர் அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது. எனினும் நீண்ட கால அடிப்படையில் வசூல் கணிசமாக மேம்படும் என்று அது எதிர்பார்க்கிறது.
வருமானம் குறையும் என்ற ஊராட்சி மன்றங்களின் கவலைகளுக்கு மத்தியில், அமைப்பு முறை நிலைபெறும் வரை வருவாயில் தற்காலிக வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்று ஊராட்சி மன்றங்கள் மற்றும் சுற்றுலா துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இங் சூயி லிம் கூறினார்.
ஊராட்சி மன்றங்கள் தொடக்கத்தில் சிறிது இழப்புகளைச் சந்திக்க நேரிடலாம். ஆனால் ஒருங்கிணைந்த மற்றும் மையப்படுத்தப்பட்ட வசூல் முறையை செயல்படுத்துவது முக்கியம். இதில் மாநில அரசாங்கத்தின் சார்பாக மந்திரி புசார் கழகம் அல்லது எம்.பி.ஐ. முக்கியப் பங்கை வகிக்கிறது.
ஊராட்சி மன்றங்கள் , எம்.பி.ஐ.-க்குச் சொந்தமான ரந்தாயான் மெஸ்ரா சென்.பெர்ஹாட் மற்றும் சலுகை நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒப்பந்தம் மூலம் திட்டம் முறைப்படுத்தப்படும் என்று இங் கூறினார்.
எஸ்.ஐ.பி. மூலம் ஊராட்சி மன்ற பார்க்கிங் தனியார் மயமாக்கப்படுவதாகக் கடந்த ஜூலை 9ஆம் தேதி அறிவித்தபோது அவர் வெளியிட்ட அறிக்கையிலிருந்து இது வேறுபடுகிறது.
புதிய ஏற்பாட்டின் கீழ் இந்த பார்க்கிங் திட்டத்தை செயல்படுத்த ரந்தாயான் மெஸ்ரா நிறுவனத்தை எம்.பி.ஐ. நியமித்துள்ளதாகவும், பார்க்கிங் வருவாயில் 10 சதவீதம் எம்.பி.ஐ.க்கும், 40 சதவீதம் ஊராட்சி மன்றங்களுக்கும் 50 சதவீதம் ரந்தாயான் மெஸ்ரா நிறுவனத்திற்கும் செல்லும் என்றும் இங் கூறியிருந்தார்.
எனினும், சரியான வருமான பகிர்வு இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று நேற்றைய செய்தியாளர் கூட்டத்தில் இங் தெளிவுபடுத்தினார்.


