மூவார், ஜூலை 16 - கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் பாய்ந்ததில் 40 வயது மதிக்கத்தக்க ஆடவர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இச்சம்பவம் நேற்று மாலை பாகோ, ஜாலான் புக்கிட் கெபோங்கில் கம்போங் கெச்சில் பாலம் அருகே கம்போங் தூய் ஆற்றில் நிகழ்ந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தனது துறைக்கு பிற்பகல் 3.22 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகப் பாகோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய செயல்பாட்டு கமாண்டர் மூத்த தீயணைப்பு அதிகாரி நோர் அல்பாத்தா ஓமார் தெரிவித்தார்.
பாகோ மற்றும் மூவார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த ஏழு உறுப்பினர்கள் ஒரு இலகு ரக தீயணைப்பு மீட்பு டெண்டர் வாகனம் மற்றும் நான்கு சக்கர இயக்க வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
மாலை 3.51 மணிக்கு சம்பவ இடத்தை அடைந்தபோது ஒரு பெரோடுவா ஆக்சியா கார் ஆற்றில் சுமார் இரண்டு மீட்டர் ஆழத்தில் விழுந்திருப்பதை அக்குழு கண்டது.
இந்த விபத்து நேற்று முன்தினம் நிகழ்ந்திருக்கலாம் என அரச மலேசிய போலீஸ் படையின் ஆரம்பகட்ட தகவலின் அடிப்படையில் கருதப்படுகிறது. மேலும், காணாமல் போனதாகக் கூறப்படும் நபர் வாகனத்தின் ஓட்டுநர் என்று நம்பப்படுகிறது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.


