புத்ராஜெயா, ஜூலை 16 - மலேசிய ஊடக மன்றத்தின் (எம்.எம்.எம்.) உறுப்பினர் பதிவு எதிர்வரும் ஆகஸ்டு மாத தொடக்கத்தில் தொடங்கி செப்டம்பர் மாத இறுதியில் முடிவடையும். இதற்கு பெயரளவில் 10.00 வெள்ளி கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்று அந்த மன்றத்தின் வாரிய உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
எம்.எம்.எம். மன்ற வாரிய உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்களை தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாஹ்மி ஃபாட்சில் நேற்று வழங்கினார். இந்நிகழ்வுக்குப் பின்னர் அறிக்கை ஒன்றை வெளியிட்ட எம்.எம்.எம்., இம்மன்றத்தில் சேர விரும்பும் ஊடகவியலாளர்கள் www.majlismedia.my என்ற அகப்பக்கம் வாயிலாக விண்ணப்பங்களைச் செய்யலாம் எனத் தெரிவித்தது.
ஊடக உரிமையாளர்கள், தொழில் வல்லுநர்கள், தனிநபர்கள் மற்றும் ஊடக சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பொது நலனைப் பிரதிநிதிப்பவர்களுக்கு உறுப்பியம் திறந்திருக்கும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வரும் நவம்பர் 7 ஆம் தேதி கோலாலம்பூரில் மன்றத்தின் முதலாவது ஆண்டுப் பொதுக் கூட்டம் நடைபெறும் என்றும் அதில் புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் அதேவேளையில் உறுப்பினர் கட்டண அமைப்பு, தொழில் நெறிமுறைகள் மற்றும் புகார் வழிமுறை, ஆண்டு பட்ஜெட் மற்றும் மன்ற துணைச் சட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அது அறிவித்துள்ளது.
இதன் முதல் கூட்டத்தில் பிரமேஷ் சந்திரனை இடைக்காலத் தலைவராக மன்றத்தின் வாரிய உறுப்பினர்கள் நியமித்தனர். இந்த ஆண்டு இறுதியில் முழு வாரியத்தின் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த மன்றம் நாட்டின் ஊடகத் துறைக்கான ஒரு சுயேச்சையான, சுய-ஒழுங்குமுறை அமைப்பாகும். மேலும் நெறிமுறை மற்றும் பொறுப்பான பத்திரிகையை ஊக்குவித்தல், ஊடகத் துறைக்கு நெறிமுறைகளை அமைத்தல், மற்றும் அரசாங்க ஊடகங்களுக்கும் சமூகத்திற்கும் இடையே ஒரு தொடர்பு பாலமாகச் செயல்படுதல் உள்ளிட்ட பல பொறுப்புகளை இது வகிக்கும்.


