பங்சார், ஜூலை 15 - கோலாலம்பூர் காற்பந்து சங்கத்திற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 10 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீட்டை அறிவித்துள்ளார். கோலாலம்பூரில் காற்பந்து விளையாட்டின் மறுவளர்ச்சியை ஆதரிக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மக்களின் விருப்பமான காற்பந்து விளையாட்டின் வளர்ச்சி தொடர்ந்து ஊக்குவிக்கப்படுவதுடன், அதன் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை அரசாங்கம் வலியுறுத்தி வருவதாக அவர் கூறினார்.
"இந்த நடவடிக்கை நம் நாட்டில் காற்பந்தின் வளர்ச்சியை உயர்த்துவதற்கான ஒரு வாய்ப்பு ஆகும்", என்றார் பிரதமர்.
கோலாலம்பூர், பங்சாரில் நடைபெற்ற கோலாலம்பூர் காற்பந்து சங்கத்தின் 50-ஆம் ஆண்டின் நிறைவு விழா கலந்துக் கொண்டு உரையாற்றும்போது டத்தோ ஸ்ரீ அன்வார் இதனை கூறினார்.
தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் மற்றும் கோலாலம்பூர் காற்பந்து சங்கத்தின் தலைவர் சைட் யாசிட் சைட் ஒமார் ஆகியோர் அந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.
விளையாட்டு கலாச்சாரத்தைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்து பேசிய பிரதமர், சில சமயங்களில் ஒற்றுமைக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் வரம்பு மீறிய ஆதரவாளர்களின் நடத்தைத் தொடர்பிலும் சாடியிருந்தார்.
பெர்னாமா


