(ஆர.ராஜா)
ஷா ஆலம், ஜூலை 15 - உலு சிலாங்கூர் மாவட்டத்தில் சாலைகள் உள்ளிட்ட பொது இடங்களில் மாடுகள் சுற்றித் திரியும் பிரச்சனைக்குத் தீர்வு காண மாவட்ட நில அலுவலகமும் கால்நடைச் சேவைத் துறையும் இணைந்து அரசு துறைகளுக்கிடையிலான செயல்குழுவை அமைக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அளவுக்கு தங்கள் கால்நடைகளின் பராமரிப்பில் அலட்சியம் காட்டும் உரிமையாளர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு இந்நடவடிக்கை அவசியமாகிறது என்று கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினர் பாங் சோக் தாவ் கூறினார்.
அண்மையில் சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை மாடு எட்டி உதைத்ததில் அதன் ஓட்டுநர் தடுமாறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய அவர், சாலையைத் திடீரென கடக்கும் மாடுகளால் சாலையைப் பயன்படுத்துவோருக்கு ஆபத்து ஏற்படுவதோடு சில வேளைகளில் உயிரையும் பறித்து விடுகிறது என்று சொன்னார்.
முன்னதாக அவர், கெர்லிங், பத்து டுவா தோட்டத்தில் மாடு எட்டி உதைத்த சம்பவத்தில் உயிரிழந்த 53 வயதான வடிவேலுவின் வீட்டிற்கு பாங் சென்று அன்னாரின் குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்தார்.
வடிவேலுவின் மறைவால் துயரில் ஆழ்ந்திருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு தொகுதியின் சார்பாக நிதியுதவி வழங்கிய அவர், பொது இடங்களில் மாடுகள் சுற்றித் திரிவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது என்றார்.
செம்பனைத் தோட்ட மேலாளரான வடிவேலு, இம்மாதம் 5ஆம் தேதி காலையில் கெர்லிங் பத்து டுவா சாலையில் சிறிய பாலம் ஒன்றை மோட்டார் சைக்கிளில் கடக்கையில் மாடு ஒன்று திடீரென பின்புறமாக வந்து எட்டி உதைத்தது. இதனால் நிலைதடுமாறி ஆற்றில் தூக்கியெறியப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


